'டவுட்' தனபாலு: கும்பாபிஷேகத்தை முன்வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்
'டவுட்' தனபாலு: கும்பாபிஷேகத்தை முன்வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள்
ADDED : ஜன 24, 2024 03:57 AM

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி:
அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்வை, காங்., கட்சி அரசியலாக தான் பார்க்கிறது. மத நம்பிக்கை என்பது தனி நபரின் விருப்பம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றுவதில் தவறில்லை. அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தை முன்வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். 10 ஆண்டுகளாக பா.ஜ., செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே ஓட்டளிப்பர்.
டவுட் தனபாலு:
அயோத்தி கோவில் நிகழ்வை முன்வைத்து மக்கள் ஓட்டளிக்க மாட்டாங்க என்பதால் தான், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவை, உங்க கட்சியின் தேசிய தலைவர்கள் எடுத்தாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
---
அகில இந்திய காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:
எப்போது தேர்தல் வருகிறதோ, அப்போது தான் பா.ஜ.,விற்கு பழங்குடியினரைப் பற்றிய நினைவு வரும். கடந்த, 10 ஆண்டுகளாக பழங்குடியினர் நலனுக்காக பா.ஜ., என்ன செய்தது என்பதை கேட்க விரும்புகிறேன்.
டவுட் தனபாலு:
பிரதமர் மோடி ஆட்சியில தான், அந்த சமூகத்தின் திரவுபதி முர்முவுக்கு நாட்டின் உயரிய ஜனாதிபதி பதவி குடுத்திருக்காங்க... மோடிக்கு முன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்., நடத்திய ஆட்சியில், பழங்குடியினருக்கு என்ன செய்தீங்க என்ற, 'டவுட்'டுக்கு விடை தர முடியுமா?
---
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை:
தமிழக அரசு, மக்கள் நம்பிக்கைக்கு எதிராக உள்ளது; குறிப்பாக, ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதை, கடந்த மூன்று நாட்களாக நடந்த சம்பவங்கள் ஊர்ஜிதம் செய்துள்ளன. வரும் லோக் சபா தேர்தலில், ஆளும் தி.மு.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.
டவுட் தனபாலு:
தி.மு.க.,வுக்கு ஓட்டு போடலாம் என எண்ணியிருந்த கொஞ்ச, நஞ்ச ஹிந்துக்களும், ராமர் கோவில் விழாவுக்கு ஆளுங்கட்சி தரப்பு போட்ட கெடுபிடிகளை பார்த்து, அந்த எண்ணத்தை அடியோட கைவிட்டிருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

