மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
மகளுக்கு வரதட்சணை கொடுமை; இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் போலீசில் கண்ணீர் புகார்!
UPDATED : ஏப் 16, 2025 09:54 PM
ADDED : ஏப் 16, 2025 12:41 PM

திருநெல்வேலி: வரதட்சணை என்ற பெயரில் திருநெல்வேலி அல்வா இருட்டுக்கடையை கேட்ட புதுமாப்பிள்ளை மருமகன் பல்ராம் சிங் குடும்பத்தினர் மீது அல்வா கடை உரிமையாளர் கவிதா சிங், போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உரிமையாளர் கவிதா சிங், தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக திருநெல்வேலி போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கவிதா சிங் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார். பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் தலைமுறை தலைமுறையாக பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த வரதட்சணை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளக்கம்
கனிஷ்காவின் மாமனார் நிருபர்களிடம் கூறியதாவது: இருட்டுக் கடையை நாங்கள் கேட்கவில்லை. அந்தக் கடைக்கு வங்கியில் ரூ.5 கோடி கடன் உள்ளது. இரண்டு கார்களை கடனுக்கு வாங்கி உள்ளனர். வட்டி கட்ட முடியாமல், ஒரு காரை விற்றுவிட்டனர்.மருமகள் குற்றம்சாட்டிய காலத்தில் எனது மனைவி சிங்கப்பூரில் இருந்தார்.அந்தப் பெண் மீது உள்ள குற்றச்சாட்டை மறைக்கவும், கடன் தொகை காரணமாக ஏற்பட்ட மனநோய்க்கு ஆளானதை கண்டுபிடிக்கப்பட்டதால் குற்றச்சாட்டை கூறுகின்றனர். இந்த பிரச்னையில் தவறு வெளிப்பட்டு விட்டது. மோசடி வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து குற்றம்சாட்டினர். அதற்கு எந்த வித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாத குற்றச்சாட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.