ADDED : நவ 14, 2024 12:37 AM
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அரசு மருத்துவமனையில், அரசு டாக்டருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. கொடுங்குற்றங்களைக் கூட எந்த இடத்திலும் துளியும் அச்சமின்றி செய்யலாம் என்ற அளவிற்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் கத்தியை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார் என்றால், அந்த மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்பே இல்லை என்றுதான் அர்த்தம். மருத்துவமனையின் நுழைவாயிலில் போலீஸ் இருந்திருந்தால், கத்தியை எடுத்துச் சென்ற நபர் தடுக்கப்பட்டிருப்பார். கத்திக்குத்து தாக்குதல் தடுக்கப்பட்டு இருக்கும். இதைச் செய்ய தி.மு.க., அரசு தவறி விட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: டாக்டர்களுக்கும், மருத்துவமனையில் வேலை செய்பவர்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். வேலை நிறுத்தம் செய்யும் டாக்டர்களிடம் அரசு பேச்சு நடத்த வேண்டும். டாக்டர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: உலகில் விவசாயிகளுக்கு அடுத்தபடியாக, உயிர் காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள் டாக்டர்கள். அவர்கள் மருத்துவம் அளிப்பதில், எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. அவ்வாறு இருக்கும்போது, அப்பாவி டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை, அரசும், போலீஸ் துறையும் வேடிக்கை பார்க்கக் கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் பாலகிருஷ்ணன்: கத்திக்குத்துக்கு ஆளான டாக்டர் பாலாஜிக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிப்பதை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
துணை முதல்வர் உதயநிதி: தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். டாக்டர் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினோம். இரவு, பகல் பாராது மக்களை காக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்களுக்கு, அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாக இருக்கும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்: இந்த மருத்துவமனைக்கு அருகில் தான் கிண்டி காவல் நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தினமும் 2,000க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். புறநோயாளிகளுக்கான சீட்டு இல்லாமல், டாக்டரை பார்க்க முடியாது. தாக்குதல் நடத்திய நபரின் தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால், அந்நபர் பலமுறை வந்திருக்கிறார். அவரை இங்குள்ளவர்களுக்கு தெரிந்திருந்ததால், அவர் மீது எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை.
சென்னை போலீஸ் கமிஷனர் அருண்: கத்தி குத்து தொடர்பாக, கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் காவல் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள் உள்ளன. மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய இணை அமைச்சர் முருகன் தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் எந்த அவலத்தில் இருக்கின்றன என்பதற்கு உதாரணம் இது. நிர்வாகத் திறனின்றி வெற்று விளம்பரத்திலேயே, இந்த அரசு கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் டாக்டர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என, யாருடைய உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல்தான் நிலவுகிறது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: பலமுறை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தும், தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டம் - ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளின்போது, அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறுவதோடு மட்டுமே நிறுத்திக் கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியதாகி இருக்கிறது. தொடர்ந்து, டாக்டர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நடப்பது, அவர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர்: ஆயுதத்தோடு தாக்குதல் நடத்தியவரிடம் சோதனை செய்யவில்லை. தேசிய மருத்துவ ஆணைய வழிகாட்டுதலின்படி, தி.மு.க., அரசு, மருத்துவமனைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதற்கு, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதே உதாரணம். அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் வைப்பது, சிலை வைப்பது, மாலை போடுவதில் கவனமாக உள்ளனர்.
மக்களுக்கும், டாக்டர்களுக்கும் இந்த அரசு பாதுகாப்பு அளிக்காது. நாம்தான் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ், துணை முதல்வர் உதயநிதிக்கு உதவியாளராவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், முதல்வருக்கு உதவியாளராகவும் செல்லலாம்.