வாக்கிங் சென்றவர் கொலையில் அதிரடி திருப்பம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது
வாக்கிங் சென்றவர் கொலையில் அதிரடி திருப்பம் கூலிப்படையினருடன் மனைவி, காதலன் கைது
ADDED : டிச 06, 2024 08:00 AM

அவிநாசி : அவிநாசியில், வாக்கிங் சென்றவர் கொல்லப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக, அவரது மனைவி, கள்ளக்காதலன், நண்பர் உள்ளிட்டோர் கூலிப்படையினருடன் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அடுத்த வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காசிக்கவுண்டன் புதுார், தாமரை கார்டன் பகுதியில் வசித்தவர் ரமேஷ், 45. கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி, 36; இரு மகள்கள் உள்ளனர்.
கடந்த 1ம் தேதி இப்பகுதியில் உள்ள சேலம் - கொச்சி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் வாக்கிங் சென்ற ரமேைஷ ஐந்துக்கும் மேற்பட்டோர் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.
கூலிப்படையினர் சிக்கினர்
இந்த வழக்கில், போலீசார், கூலிப்படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் கோபாலகிருஷ்ணன், 35, மன்னார்குடி அஜித், 27, சிம்பு, 23, சரண், 24 , தேனி மாவட்டம், சில்லுவார்பட்டி ஜெயபிரகாஷ், 45 ஆகிய ஐந்து பேரை நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து, ரமேஷ் மனைவி விஜயலட்சுமி, அவரது கள்ளக்காதலன் அவிநாசி காசிக்கவுண்டன்புதுாரை சேர்ந்த சையது இர்பான், 28, வெள்ளியம்பாளையம் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற ஜானகிராமன், 27 ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
கணவர் கொடுமைகளை பகிர்ந்த மனைவி
டி.எஸ்.பி., சிவகுமார் கூறியதாவது:
ரமேஷின் வீடு இருக்கும் பகுதிக்கு அருகில் சையது இர்பான், சிப்ஸ் கடை நடத்திவந்தார். விஜயலட்சுமியுடன் மூன்று ஆண்டுகள் முன்பு தொடர்பு ஏற்பட்டது. கணவர் ரமேஷூக்கு, சில பெண்களுடன் தொடர்பு இருப்பது விஜயலட்சுமிக்கு தெரியவந்தது. மேலும் ரமேஷ் மது குடித்துவிட்டு 'செக்ஸ்' டார்ச்சர் செய்ததோடு, அடித்து துன்புறுத்தியுள்ளார். இதை இர்பானிடம் கூறி, விஜயலட்சுமி கதறியுள்ளார். இர்பானுடன் சேர்ந்து கணவரை கொல்ல திட்டமிட்டார்.
இதற்காக தன்னிடம் இருந்த நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை இர்பான், நண்பர் அரவிந்த்துடன் சேர்ந்து அடகு வைத்து 9.6 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். இதைக் கொண்டு கூலிப்படையை அமர்த்தியுள்ளனர். வாக்கிங் சென்றபோது வீச்சரிவாள், கத்தியை கொண்டு கூலிப்படையினர் ரமேைஷ சரமாரியாக வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பியுள்ளனர். கொலை நடந்த அன்று, கணவர் வீட்டில் இருந்து வாக்கிங் புறப்பட்ட தகவலை விஜயலட்சுமி இர்பானிடம் கூறியது தெரியவந்தது.
இவ்வாறு, டி.எஸ்.பி.,கூறினார்.