தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் திராவிடமும் தமிழும்!
தமிழக அரசியலை ஆட்டிப்படைக்கும் திராவிடமும் தமிழும்!
UPDATED : அக் 22, 2024 11:04 AM
ADDED : அக் 22, 2024 10:40 AM

திராவிடம் அல்லது தமிழ் - இந்த இரண்டையும் விட்டால் தமிழக கட்சிகள் அரசியல் செய்ய முடியாது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கவர்னர் ரவி கலந்துகொண்ட துார்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்கள் செய்த பிழை, இப்போது தமிழக அரசியல் ரயிலை மீண்டும் பின்னோக்கி செலுத்துகிறது. திராவிடம், தமிழ் என்று மாறி மாறி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த திமுக, மீண்டும் இந்த ஆயுதத்தை கையில் எடுத்ததால், தமிழக கட்சிகள் திரும்ப பழைய பல்லவி பாடத் துவங்கி உள்ளன.
ஆரம்பத்தில் திராவிடம் தான் தமிழ், தமிழ் தான் திராவிடம் என்றார்கள். பின்னர் திராவிடம் வேறு, தமிழ் வேறு என்றார்கள். இப்போது திராவிடம் என்பது மரபினர், தமிழ் என்பது தேசிய இனம் என புது விளக்கம் கொடுக்கிறார்கள். ஆக மொத்தத்தில் தமிழர்கள் குழப்பத்தில் மூழ்கி விட்டனர்.
‛‛நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாயை முடக்குவேன். வேறு பாடலை வாழ்த்தாக மாற்றுவேன். திராவிடம் என்பது மாயை'' என்று திமுகவிற்கு எதிராக தோள் தட்டுகிறார் சீமான். இதற்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‛‛திராவிடம் என்பது மரபினம். தமிழ் என்பது தேசிய இனம். சீமான் சொன்னதில் தவறு இல்லை '' என்கிறார் .
சீமானுக்கு கோபம் வரக் காரணம், தமிழை மொத்த குத்தகைக்கு எடுத்துக்கொண்டது போல் திமுக தலைவர்கள் எப்போதும் பேசுவது தான். ஏனென்றால் தமிழின் பாதுகாவலன் தான் ஒருவன் மட்டுமே என்பது போல் காட்ட நினைக்கிறார் சீமான். திமுகவால் சீமானின் தமிழ் அரசியலுக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என நினைக்கிறார் சீமான்.
ஏற்கனவே சமீபகாலமாக கூட்டணி கட்சியாக இருந்துகொண்டே திமுகவை தெறிக்க விடுகிறார் திருமாவளவன். மது ஒழிப்பு மாநாட்டில் ஆரம்பித்த இந்த ‛‛தெறி'' சீமானின் கருத்துக்கு ஆதரவாக இப்போது வெளிவந்துள்ளது. ‛‛திராவிடம் தான் தமிழ், தமிழ் தான் திராவிடம்'' என திமுக கூறி வரும் நிலையில், இரண்டும் வேறு என சொல்லி கூட்டணிக்குள் புது வெடியை கொளுத்தி போட்டுள்ளார் திருமா.
தேசிய கட்சிகள் பலம் பெறும் வரையில் தமிழ்நாட்டில் திராவிடமும் தமிழும் அரசியலை ஆட்டிப்படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.