தேசிய மாடலை காப்பியடிக்கும் திராவிட மாடல்: பா.ஜ., புகார்
தேசிய மாடலை காப்பியடிக்கும் திராவிட மாடல்: பா.ஜ., புகார்
ADDED : நவ 06, 2024 07:13 PM
சென்னை:'மீண்டும் மீண்டும் தேசிய மாடலை கண்மூடித்தனமாக காப்பியடிக்கிறது திராவிட மாடல்' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.
அக்கட்சி அறிக்கை:
பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் நலத் திட்டங்களை அப்படியே, 'காப்பி' அடிப்பது, முதல்வர் ஸ்டாலினுக்கு கைவந்த கலை. அந்த வரிசையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தமிழகத்தில், 12 உட்பட நாடு முழுதும், 124 'கோ ஒர்க்கிங் ஸ்பேசஸ்' வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. இதை கண்டு, சென்னை கொளத்துாரிலும் அதே போன்றொரு கோ ஒர்க்கிங் ஸ்பேசை உருவாக்கி, தாங்கள் பிரதமர் மோடியின் அதிதீவிர ரசிகர் பட்டாளம் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளது தி.மு.க., அரசு.
பிரதமரால் தேசிய கல்வி கொள்கையின், ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்ட காலை உணவு திட்டத்தில் துவங்கி, ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா போன்ற பல திட்டங்களை, தமிழகத்தில் அறிமுகப்படுத்திய தி.மு.க., அரசு, மாற்றான் பிள்ளைக்கு தன் பெயரை சூட்டி குதுாகலிக்கிறது.
மீண்டும் மீண்டும் தேசிய மாடலை கண்மூடித்தனமாக காப்பியடிக்கிறது, திராவிட மாடல். மத்திய அரசின் திட்டங்களுக்கு தி.மு.க.,வின், 'ஸ்டிக்கர்' ஒட்டுவதை தவிர்ப்பது நல்லது.
மற்றபடி, பிரதமரின் திட்டங்களை தவறாமல் பின்தொடரும் தி.மு.க., அரசின் அளப்பறிய அன்பை கண்டு பா.ஜ., மகிழ்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.