மக்களுக்கு பெருந்துரோகம் செய்த திராவிட மாடல் அரசு; ராமதாஸ் சாடல்
மக்களுக்கு பெருந்துரோகம் செய்த திராவிட மாடல் அரசு; ராமதாஸ் சாடல்
ADDED : டிச 16, 2024 02:53 PM

சென்னை: 'தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு மருத்துவ கல்லூரி கூட திராவிட மாடல் அரசு துவங்கவில்லை. திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
அவரது அறிக்கை: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களைக் கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் இப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்தவொரு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படாததும், புதிய மாணவர் சேர்க்கை இடங்கள் ஏற்படுத்தப்படாததும் தான் இந்த நிலைக்கு காரணம் ஆகும். அரசு மருத்துவக் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைக் கூட திறக்கவில்லை; ஒரே ஒரு மருத்துவ இடத்தைக் கூட கூடுதலாக உருவாக்கவில்லை .தமிழக அரசு நினைத்திருந்தால் அதன் சொந்த நிதியில் கடந்த 3 ஆண்டுகளில் தலா இரு கல்லூரிகள் வீதம் உருவாக்கி அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகளை அமைத்திருக்க முடியும். ஆனால், மத்திய அரசு நிதியில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்கப் போகிறோம், அதற்காக மனு கொடுத்திருக்கிறோம் என்று வெற்று வசனம் பேசியே 3 ஆண்டுகளை தமிழக அரசு வீணடித்து விட்டது.
அடுத்த ஆண்டு முதல் தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க முடியாது, கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்க முடியாது என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும், மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யத் தவறியதன் மூலம் திராவிட மாடல் அரசு மக்களுக்கு பெருந்துரோகம் செய்து விட்டது. இதற்காக திமுக அரசுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.