தியாகிகளை போற்றும் திராவிட மாடல் அரசு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
தியாகிகளை போற்றும் திராவிட மாடல் அரசு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : அக் 30, 2024 12:22 PM
ADDED : அக் 30, 2024 10:48 AM

ராமநாதபுரம்: தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: வீரராக பிறந்து, வீரராக வாழ்ந்து மறைந்தவர் தேவர் என கருணாநிதி புகழாரம் சூட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு சிலைகள் அமைத்து, குரு பூஜை நடத்தியிருக்கிறோம். மதுரையில் தேவர் சிலை, கல்லூரிகளை தி.மு.க., அரசு தான் அமைத்தது. தியாகிகளை போற்றும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
காவிரி குண்டாறு திட்டப்பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளோம்; நில எடுப்பு பணிகள் 40% நிறைவு பெற்றது. விரைவாக முடிப்போம். மீனவர்கள் பிரச்னை குறித்து தொடர்ந்து கடிதம் எழுதி கொண்டு இருக்கிறோம். டில்லி செல்லும் போதெல்லாம் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் மீனவர்கள் பிரச்னை குறித்துப் பேசியுள்ளோம். இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மதுரையில் மரியாதை
முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர், தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இ.பி.எஸ்., மரியாதை
பசும்பொன்னில் தேவர் சிலைக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: தேசியம், தெய்வீகத்தை இரு கண்களாக கொண்டு செயல்பட்டவர் முத்துராமலிங்க தேவர்.
எம்.ஜி.ஆர்., காலத்தில் தான் தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்பட்டது.
வீரம், விவேகம், தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் தேவர். இவருக்கு 13.5 கிலோ தங்க கவசத்தை வழங்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் கூறினார்.