சொட்டு நீர் பாசனம் 100 சதவீத மானியம் பால் உற்பத்தியில் வெண்மை புரட்சி
சொட்டு நீர் பாசனம் 100 சதவீத மானியம் பால் உற்பத்தியில் வெண்மை புரட்சி
ADDED : ஆக 05, 2011 02:41 AM
சென்னை : தமிழகத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கி, இரண்டாம் வெண்மைப் புரட்சியை உருவாக்க, அரசு திட்டமிட்டுள்ளது.
சொட்டு நீர் பாசனத்தை செயல்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் அளிக்கப்படும். பிற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியம் அளிக்கப்படும்.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: கால்நடை வளர்ப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பால் உற்பத்தியில் இரண்டாவது வெண்மைப் புரட்சியை உருவாக்க, அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் ஒரு நாள் மொத்த பால் உற்பத்தியான, 158 லட்சம் லிட்டரில், ஆவின் மூலம் 20 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. கால்நடை வைத்திருக்கும் பயனாளிகள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்லும் வகையில், 155 நடமாடும் கால்நடை மருத்துவ மையங்கள், ஆவின் நிறுவனத்தால் தொடங்கப்பட உள்ளன.
10 கிலோ மீட்டர் சுற்றளவில், ஒரு நடமாடும் கால்நடை மருத்துவ மையம் செயல்படுவது உறுதி செய்யப்படும். பால் கொள்முதலை அதிகரிக்க, 2011-12ம் ஆண்டில் ஆவின் நிறுவனத்தால், மேலும் 10 பால் பண்ணைகள் உருவாக்கப்படும். சென்னை, நாமக்கல்லில் உள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி போன்று, திருநெல்வேலியில் புதிய கல்லூரி விரைவில் செயல்படத் துவங்கும். தஞ்சாவூரில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஓசூரில் உலகத் தரம் வாய்ந்த கோழி வளர்ப்பு மையம் உருவாக்கப்படும். நடப்பாண்டில் 24 ஆயிரம் ஏக்கரில், குறிப்பிட்ட பசுந்தீவன வளர்ப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும். சொட்டு நீர் பாசனத் திட்டம், பாசன தெளிப்பான்களை பயன்படுத்தும் சிறு விவசாயிகளுக்கு 100, குறு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கப்படும். தீவன சேதாரத்தைக் குறைக்க, 50 சதவீத மானியத்தில் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்படும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.