UPDATED : அக் 26, 2026 09:37 PM
ADDED : அக் 26, 2026 09:14 PM
திருப்பூர்: கனமழையின் போது, அரசு பஸ்களை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பாக, டிரைவர், கண்டக்டர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட அரசு பஸ், கடந்த 23ம் தேதி அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கியது. இதில், டிரைவர் ஜனகராஜ் உயிரிழந்தார். நடத்துனர் கேசவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பஸ் பஞ்சர் காரணமாக, முன்னதாகவே இறக்கிவிடப்பட்ட 7 பயணியர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
வங்கக்கடலில் உருவாக உள்ள ஒர்னாப் புயல் காரணமாக, பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையின்போது சாலைகள் தெளிவாக தெரியாவிட்டால் பஸ்களை பாதுகாப்பாக நிறுத்தி, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள சாலைகள், சுரங்கப்பாதைகளை தவிர்த்து, மாற்று பாதையில் செல்ல வேண்டும். மலைப்பாதைகளில் நிலச்சரிவு, பாறைகள் விழும் அபாயம் உள்ள இடங்களில் கூடுதல் கவனத்துடன் பஸ்களை இயக்க வேண்டும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், பயணத்தை தொடங்கும் முன் முகப்பு விளக்குகள் சரியாக இயங்குகின்றனவா, சாலையில் மரங்கள் விழுந்து கிடக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயணியரும் கனமழையின்போது தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். பஸ் பயணத்தின்போது டிரைவர், கண்டக்டர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும். வெள்ளம் தேங்கிய சாலைகளில் இறங்குவதையோ, ஆபத்தான இடங்களில் சாலையை கடப்பதையோ தவிர்க்க வேண்டும். வானிலை எச்சரிக்கைகளை கவனித்து, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
