ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்; ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
ADDED : ஜன 30, 2025 02:58 AM

சென்னை: 'ஆட்டோக்களுக்கு அரசு புதிய கட்டணம் நிர்ணயிக்காததால், நாங்களே கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். வரும் 1ம் தேதி முதல் புதிய கட்டணத்தில் ஆட்டோக்களை இயக்குவோம்' என, ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பு தெரிவித்துஉள்ளது.
தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை, 2013ம் ஆண்டு அரசு மாற்றி அமைத்தது. முதல் 1.8 கி.மீ., துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா, 12 ரூபாய் காத்திருப்பு கட்டணம் அனுமதித்து, போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது.
கூடுதல் கட்டணம்
இந்த கட்டணம் மாற்றியமைத்து, 12 ஆண்டுகள் ஆகி விட்டன. இந்நிலையில், அதிருப்தியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டணத்தை அவர்களே மாற்றியமைத்துஉள்ளனர்.
அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜாஹீர் ஹுசைன், வெற்றிவேல் ஆகியோர் அளித்த பேட்டி:
பெட்ரோல், உதிரி பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த தொழிலை நடத்த முடியாத நிலையில் இருக்கிறோம்.
எனவே, தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்கும் வரை, சென்னையில் பிப்., 1 முதல் குறைந்தபட்ச கட்டணமாக, 1.8 கி.மீ.,க்கு 50 ரூபாய் என வசூலிக்க உள்ளோம்.
அதேபோல், கூடுதல் கி.மீ.,க்கு 18 ரூபாய், 5 நிமிடத்துக்கு மேல் காத்திருப்பு கட்டணமாக, நிமிடத்துக்கு 1.50 ரூபாய் வசூலிப்போம். இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை, பகல் நேர கட்டணத்தில், 50 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
போக்குவரத்து துறை அமைச்சர், இதுவரை எங்களது கோரிக்கை குறித்து பேசவில்லை.
ஓலா, ஊபர்
தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி சேவைகளை வழங்கி வரும் ஓலா, ஊபர் நிறுவனங்கள், ஓட்டுனர்களிடம் இருந்து 25 சதவீதம் வரை, கமிஷனாக எடுத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மற்ற நிறுவனங்களான, 'நம்ம யாத்திரி, டாக்ஸீனா' நிறுவனங்கள் போன்றவை, ஒரு நாளைக்கு ஆட்டோக்களுக்கு தலா 25 ரூபாய், 35 ரூபாய், கால் டாக்ஸிகளுக்கு 45 ரூபாய், 75 ரூபாய் என, சந்தா மட்டுமே வசூலிக்கின்றனர்.
எனவே, சென்னையில் வரும் பிப்., 1 முதல் ஓலா, ஊபர் நிறுவனங்களில் ஆட்டோ, கால் டாக்சிகளை இயக்க மாட்டோம். அதற்கு பதிலாக, 'நம்ம யாத்திரி, டாக்ஸீனா' நிறுவனங்களில் இயக்கப்படும். புதிய ஆட்டோ கட்டணத்துக்கும், ஓலா, ஊபர் நிறுவனங்களை புறக்கணிக்கவும் சென்னையில் 80 சதவீதம் ஓட்டுனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.