அனுமதி பெறாமல் பறக்கும் 'ட்ரோன்': போலீசே இனி தரையிறக்கம் செய்யும்
அனுமதி பெறாமல் பறக்கும் 'ட்ரோன்': போலீசே இனி தரையிறக்கம் செய்யும்
ADDED : மார் 27, 2025 04:19 AM

சென்னை : அனுமதி பெறாமல் பறக்க விடப்படும், 'ட்ரோன்'களின் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தரையிறக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பேரணி போன்றவற்றில் புகைப்படம், வீடியோ எடுக்க, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் பயன்படுத்தப்படுகிறது.
இதை இயக்குவோர், முறைப்படி காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும். தொழில் ரீதியாக ட்ரோன் பயன்படுத்துவோர், அனுமதி பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர், விமான நிலையம் உள்ளிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இடங்களிலும், ட்ரோன்களை பறக்க விட்டு, புகைப்படங்களை எடுக்கின்றனர். எனவே, அனுமதி பெறாமல் பறக்க விடப்படும், 'ட்ரோன்'களின் இயக்கத்தை தடுக்க, புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ட்ரோன் பயன்பாட்டில், இஸ்ரேல் நாடு சிறப்பாக செயல்படுகிறது. ஒரே சமயத்தில் அதிக ட்ரோன்கள் பறக்கும் பட்சத்தில், எது அனுமதி பெற்றது, பெறப்படவில்லை என்று கண்டறிவதில் சிரமம் உள்ளது.
விசாரணை நடத்தும் பட்சத்தில், அனுமதி பெறாமல் பறக்க விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், புகார்கள் வந்ததும், ட்ரோன் பறக்க விட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், ட்ரோன் பறிமுதல் செய்யப்படுகிறது.
எனவே, இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன், அனுமதி பெறாமல் ட்ரோன்கள் பறந்தால், அதை போலீசார் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, தரையிறக்கி பறிமுதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால், அனுமதி பெறாமல் ட்ரோன் பறக்க விடுவது தடுக்கப்படும்; பாதுகாப்பும் பலப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.