போதைப்பொருள் விவகாரம்: நடிகர்களை அடுத்து சிக்கும் உதவி இயக்குநர்கள்
போதைப்பொருள் விவகாரம்: நடிகர்களை அடுத்து சிக்கும் உதவி இயக்குநர்கள்
ADDED : ஜூன் 28, 2025 03:16 AM

சென்னை: சினிமா இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கும் 'கோகைன்' விற்றுள்ளதாக, கைதான போதைப்பொருள் 'டீலர்' கெவின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சமூக வலைதளம்
சர்வதேச போதைப்பொருள் டீலரான, சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கெவின், 47, மற்றும் நடிகர் கிருஷ்ணா, 47, ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரிடம் கெவின் அளித்துள்ள வாக்குமூலம்:
என் முழு நேர தொழிலே, கோகைன், மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பது தான். எனக்கு ஜெஸ்வீர் என்ற பெயரும் உண்டு.
கோலிவுட் பிரபலங்கள், 'பவுடர் ஜெஸ்வீர்' என்றே அழைப்பர். என் வாடிக்கையாளர்களில் நடிகர் - நடிகையரை விட, சினிமா பட இயக்குநர்கள், உதவி இயக்குநர்களே அதிகம். கோகைன், ஹெராயின், மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்க, சமூக வலைதளமான வாட்ஸாப், டெலிகிராமில் குழு துவக்கி நடத்தி வந்தேன்.
பார்ட்டி
நடிகர் - நடிகையர் பிறந்த நாள் பார்ட்டி, படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் தனிப்பட்ட ரீதியாக சினிமா பிரபலங்கள் அளிக்கும் பார்ட்டிகளுக்கும் போதைப் பொருள் வினியோகம் செய்து வந்தேன்.
என் நெருங்கிய நண்பரான நடிகர் கிருஷ்ணா அடிக்கடி தன் நண்பர்களுக்கு பார்ட்டி வைப்பார். வாட்ஸாப் குழுவில், பார்ட்டி நடக்கும் இடம் மற்றும் நேரம் குறித்து தெரிவிப்பார்.
இரவு நேர துாக்கம் தொலைத்து பணிபுரியும் மென்பொருள் நிறுவன ஊழியர்களும், கோகைன் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கும் கோகைன் விற்றுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாட்ஸாப் குழு
கெவின் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் துவங்கிய வாட்ஸாப் குழுவில் இடம் பெற்ற நடிகர் - நடிகையருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த குழுவில் இருந்த எல்லாரையும் விசாரணைக்கு ஆஜர்படுத்த, போலீசார் முடிவு செய்துள்ளனர்.