தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சர்வதேச போதை கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் பிடிபட்டார்! : ஜெய்ப்பூரில் பதுங்கியவரை தூக்கியது டில்லி போலீஸ்

சர்வதேச போதை கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் பிடிபட்டார்! : ஜெய்ப்பூரில் பதுங்கியவரை தூக்கியது டில்லி போலீஸ்

சர்வதேச போதை கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் பிடிபட்டார்! : ஜெய்ப்பூரில் பதுங்கியவரை தூக்கியது டில்லி போலீஸ்


UPDATED : மார் 10, 2024 10:54 AM

ADDED : மார் 09, 2024 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 10, 2024 10:54 AM ADDED : மார் 09, 2024 12:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைமறைவாக இருந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாபர் சாதிக், நேற்று டில்லி போலீசிடம் பிடிபட்டார். போதை பிசினசில் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை தமிழக சினிமா, ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்திருப்பதையும், மிகப்பெரிய அரசியல் புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதையும் ஜாபர் சாதிக் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்திருப்பதாக, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூசிலாந்து நாட்டு போலீசிடம் இருந்து ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில், டில்லியில் சமீபத்தில் என்.சி.பி., அதிகாரிகள், டில்லி போலீஸ் துணையுடன் சோதனை நடத்தினர். அப்போது, தமிழகத்தை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசோக்குமார் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வைத்திருந்த, 50 கிலோ 'ஸூடோ-எபிட்ரின்' என்ற ரசாயன பொருளை கைப்பற்றினர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ரசாயனம், 'மெத்தாம்பெட்டமைன்' என்ற பயங்கரமான போதை பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுகிறது.

தலைமறைவு

விசாரணையில், இந்த சர்வதேச கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. இவர், தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தார். அவரது சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீனும் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3,500 கிலோ போதை பொருட்களை 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பி, பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த செய்தி வெளியானதும், ஜாபர் சாதிக் தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். அவர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க மத்திய அரசு, 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பித்தது. இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை, என்.சி.பி., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து, என்.சி.பி., துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் கூறியதாவது: ஜாபர் சாதிக், சர்வதேச அளவில் போதை பிசினஸ் செய்து வந்துள்ளது விசாரணையில் உறுதியாகி உள்ளது. டில்லி, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் இவரது நடவடிக்கைகள் பரவியிருந்தன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேஷியா நாடுகளிலும் இவரது நெட்வொர்க் விரிந்து கிடக்கிறது. போதை கடத்தல் வாயிலாக கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அதை, திரைப்படம், கட்டுமானம், ஹோட்டல், ரிசார்ட் தொழில்களில் முதலீடு செய்துள்ளார். கடத்தல் தொழிலை ரகசியமாக வைத்துக் கொண்டு, வெளியுலகிற்காக இந்த தொழில்களை நடத்தி வந்துள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி டில்லி போலீசின் சிறப்பு பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து, மூன்று பேரை கைது செய்தனர். அவெந்தா என்ற பெயரில் இயங்கிய கம்பெனியின் குடோனில், 50 கிலோ போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.

வாக்குமூலம்

இதன் தொடர்ச்சியாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜாபர் சாதிக் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து, 50 கிலோ ஸூடோ-எபிட்ரின் போதை பொருளுடன் அவரை பிடித்துள்ளோம். இரண்டு வாரமாக திருவனந்தபுரம், மும்பை, புனே, ஆமதாபாத், ஜெய்ப்பூர் என, பல நகரங்களுக்கு ஓடி ஓடி, ஜாபர் சாதிக் பதுங்கி இருந்துள்ளார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேஷியா நாடுகளுக்கு போதை பொருட்களை கடத்துவது இந்த கும்பலின் வேலை. சத்து மாவு, தேங்காய் பொடி போன்ற உணவு பொருட்களை மொத்தமாக ஏற்றுமதி செய்யும் போர்வையில் போதை பொருட்களை கடத்தி வந்துள்ளனர்.முதலில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும், தற்போது கைதான ஜாபர் சாதிக்கும் இந்த விஷயங்களை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் தந்துள்ளனர். வெளிநாடுகளுக்கு, 40 முதல் 45 கன்சைன்மென்டுகளாக 3,500 கிலோ ஸூடோ-எபிட்ரின் கடத்தி உள்ளதாக ஜாபர் சாதிக் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கிலோ கடத்தினால் சாதிக்கிற்கு 1 லட்சம் ரூபாய் கமிஷன் கிடைத்துள்ளது.

சென்னையில் வசித்து வந்த ஜாபர் சாதிக், தி.மு.க.,வுடன் தொடர்புள்ளவர். அந்த கட்சியின் அயலக அணியில் பொறுப்பிலும் இருந்துள்ளார். சாதிக் பணம் எங்கெல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்திலும், அதிகாரத்திலும் உள்ள முக்கியஸ்தர்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். பெரும்பாலானோர் தமிழ் திரையுலக பிரபலங்கள். சாதிக் தொழிலுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை கூட விட்டு வைக்காமல் தீவிரமாக விசாரித்து, முழு உண்மையை வெளியே கொண்டு வருவோம். போதை கடத்தல் வாயிலாக கிடைத்த மொத்த பணத்தையும் பறிமுதல் செய்வோம்.

பல மடங்கு விலை

கடத்தல் பணத்தில் ஜாபர் சாதிக் ஒரு ேஹாட்டல் கட்டியுள்ளார். அந்த ேஹாட்டலில் இருந்து மலேஷியாவுக்கு இன்னொரு சிந்தடிக் போதை பொருளை அவர் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. சர்வதேச சந்தையில் போதை பொருளின் தேவைக்கு ஏற்ப அதன் விலை ஏறி இறங்கும். இங்குள்ளதை காட்டிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் இந்த போதை பொருட்களுக்கு பல மடங்கு விலை கிடைக்கும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பிரபலங்களின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது. அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விசாரணை இறுதியில் அவர்கள் யார் என்பதை தெரிவிப்போம். குற்றவாளிகள் எந்த ஜாதி, மதம், கட்சி என்பதை எல்லாம் நாங்கள் பார்க்கவில்லை. சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கிறோம். சட்டத்தை மீறுகிறவர்கள், குற்றம் புரிபவர்கள் எவராக இருந்தாலும் நடவடிக்கை பாயும். இதுவரை நான்கு பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். யாருக்கெல்லாம் சம்மன் அனுப்புவது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு ஞானேஷ்வர் சிங் கூறினார்.

சாதிக்கை டில்லி கோர்ட்டில் ஆஜர்படுததினர். அவரை ஒரு வாரம் என்.சி.பி., காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

ராஜஸ்தான் சொகுசு ஹோட்டல்?

தங்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் மிக மிக ரகசியமாக வைத்து, இந்த கைது நடவடிக்கையை, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எடுத்துள்ளனர். மூன்று நாட்களுக்கு முன், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் பதுங்கியிருந்த போது, ஜாபர் சாதிக் வளைத்து பிடிக்கப்பட்டு, அவரிடம் இருந்து முக்கியமான தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், நேற்று டில்லியில் வைத்து, அவர் போதை பொருள் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டதாகவும், இனிமேல் தான் காவலில் எடுக்கப் போவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழு விசாரணை தேவை

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவரான தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதை பொருள் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், பல தி.மு.க., தலைவர்கள் உடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பண மோசடி செய்ய ஜாபர் சாதிக் எவ்வாறு, அவர்களுக்கு உதவியாக செயல்பட்டார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.விசாரணை அதிகாரிகள் முழு விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

'இயக்குனர் அமீருக்கு மட்டுமல்ல மேலும் சிலருக்கும் தொடர்பு'

மத்திய போதை பொருள் தடுப்பிரிவு துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங் மேலும் கூறியதாவது: தமிழ் திரைப்பட இயக்குனர் அமீருக்கு, இந்த விஷயத்தில் உள்ள தொடர்பும் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அது, எந்த வகையான தொடர்பு என்பதை தற்போது வெளிப்படையாக கூற மாட்டோம். தொடர்பு உள்ளதா என்று கேட்டால், இப்போதைக்கு பதில் 'யெஸ்' மட்டுமே. அவர் மட்டுமல்ல, மேலும் சிலருக்கும் உறுதியாக தொடர்பு உள்ளது.தி.மு.க., மாவட்ட செயலர் சிற்றரசு என்பவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து, தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. விரிவான விசாரணை தொடர்கிறது. போதை பொருள் தடுப்பு சட்டத்தை மீறியதாக, எவர் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர் கைது செய்யப்படுவார். தற்போதைக்கு ஜாபர் சாதிக் விவகாரத்தில், தமிழக திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது உறுதியாக தெரிய வந்துள்ளது. இதன் தொடர்புகள் கோலிவுட்டை தாண்டியும் நீள்கிறதா என்பது இனிமேல் தான் தெரியும். இருப்பினும், இதில் பாலிவுட்டை சேர்ந்த ஒரு நடிகரும் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் பற்றி அடுத்த வாரம் தெரிவிக்கப்படும். ஒட்டு மொத்த கடத்தல் கும்பலின் தலைவன், ஜாபர் சாதிக் தான். இந்த கடத்தல் முழுமைக்குமே, இவர் தான் மாஸ்டர் மைன்ட். இவரது தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள மங்கை என்ற படம், முழுக்க முழுக்க போதை கடத்தல் பணத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது டில்லி நிருபர் -



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us