ஆக்கிரமிப்பு, விதிமீறலை கண்டுபிடிக்க புதிய 'சாப்ட்வேர்' தயாரிக்கிறது டி.டி.சி.பி.,
ஆக்கிரமிப்பு, விதிமீறலை கண்டுபிடிக்க புதிய 'சாப்ட்வேர்' தயாரிக்கிறது டி.டி.சி.பி.,
ADDED : ஜூன் 04, 2025 10:30 PM
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள், கட்டட விதிமீறல்களை துல்லியமாக கண்டுபிடிப்பதற்கான, 'சாப்ட்வேர்' தயாரிப்பு பணிகளை, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., துவக்கி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளில் சாலைகளின் அளவுகள் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, புதிய மனைப்பிரிவுகள் உருவாக்கும்போது, சாலை அளவுகள் தெளிவாக குறிப்பிடப்படுகின்றன.
வணிக நிறுவனங்கள்
இருப்பினும், அதில் மனை வாங்கியவர்கள் வீடு கட்டி குடியேறும் நிலையில், சாலையை ஆக்கிரமிக்க துவங்குகின்றனர். வீட்டின் முகப்பு, வாகன நிறுத்தம் போன்ற காரணங்களுக்காக துவங்கும் ஆக்கிரமிப்பு, வணிக நிறுவனங்களால் வெகுவாக அதிகரிக்கிறது.
பல இடங்களில், மனையின் எல்லைக்கு வெளியில் கடைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதனால், மக்கள் பயன்பாட்டுக்கான சாலை அளவு சுருங்கி விடுகிறது.
இதேபோன்று, முறையாக திட்ட அனுமதி பெற்றதை விட, கூடுதல் அளவுக்கு குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதனால், நகர பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள், விதிமீறல் கட்டடங்கள் வெகுவாக அதிகரிக்கின்றன.
இப்பிரச்னைகளில் நேரடி ஆய்வு செய்து, விதிமீறல்களை கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாக மாறியுள்ளது; நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதற்காக, புதிய 'சாப்ட்வேர்' தயாரிக்கும் பணிகளை, நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., முடிவு செய்துள்ளது.
தகவல் அமைப்பு
இதுகுறித்து, டி.டி.சி.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள், விதிமீறல் கட்டடங்கள் அதிகரித்துள்ளன. ஜி.ஐ.எஸ்., எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு உதவியுடன், ஒவ்வொரு பகுதியிலும் கட்டடங்களை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தொலையுணர்வு செயற்கைகோள் மற்றும் புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையில், 'சர்வே' எண் வாரியாக ஒவ்வொரு நிலத்தையும் துல்லியமாக கண்காணிக்க, புதிய சாப்ட்வேர் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குறிப்பாக, சாலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகள், கட்டட விதிமீறல்கள் குறித்த விபரங்களை, தானியங்கி முறையில் தெரிவிக்கும் வகையில், இந்த மென்பொருள் இருக்கும்.
கோவையில் இதை முதலில் செயல்படுத்தவும், அதன்பின் தமிழகம் முழுதும் விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறோம்.
புதிய சாப்ட்வேர் தயாரிப்பதற்கான தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

