ADDED : பிப் 14, 2024 01:41 AM

திருப்பூர்:புதிய ஏற்றுமதி வர்த்தக ஆர்டர்களை ஈர்க்க, துபாயில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில் பங்கேற்கலாம் என, ஏற்றுமதியாளர்களுக்கு, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளுடான வர்த்தகத்தை ஊக்குவிக்க, மத்திய அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அவ்வகையில், துபாயில் வரும் மே மாதம் நடக்க உள்ள, சர்வதேச ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை கண்காட்சியில் பங்கேற்க மானியம் வழங்கப்படும் என, மத்திய ஜவுளித்துறை மற்றும் ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறியதாவது:
இந்தியா - துபாய் இடையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியில் புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வரும், மே 20 முதல் 22ம் தேதி வரை, துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, இந்தியாவுக்கு கூடுதல் ஆர்டர்களை ஈர்க்க முடியும்.
கண்காட்சியில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு சிறப்பு மானியம் வழங்குகிறது. வெப்பம் அதிகமுள்ள அந்நாடுகளில், பருத்தி நுாலிழை ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது; ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, புதிய ஆர்டர்களை ஈர்க்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, www.aepcindia.com என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐக்கிய அரபு நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 15 சதவீத பங்களிப்புடன், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
துபாய்க்கான, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, கடந்த ஆண்டில் 7,872 கோடி ரூபாயாகும்.
