ADDED : ஆக 11, 2011 11:22 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில், போலி தங்க காசுகளை கொடுத்து, வாலிபரிடம் செயின், மொபைல் போனை பறித்து சென்றனர்.ராமநாதபுரம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாதன். மலேசியாவில் பணிபுரிந்த இவர், நேற்று முன்தினம், ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வடநாட்டு வாலிபர் உட்பட மூவர், விபத்தில் தாய்க்கு கால் உடைந்து, மருத்துமனையில் உள்ளார். மொழி தெரியாததால் உதவுமாறு கேட்டு, ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பின்புறம் அவரை அழைத்து சென்றனர்.
அவர்களில் இருவர், வடநாட்டு ஆசாமியிடம், 80 ஆயிரம் ரூபாயை கொடுத்து, 10 தங்க காசுகள், மொபைல் போன், எல்.சி.டி., 'டிவி'யை வாங்கிக் கொண்டு, 'நாங்கள் 80 ஆயிரம் கொடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேலான பொருட்களை வாங்கி விட்டோம். நீயும் தங்க காசுகளை வாங்கி விடு' என, கூறினர். பிறகு, ராமநாதனின் கழுத்திலிருந்த 2.5 சவரன் செயின், கைச்செயின், மோதிரம் என, 6 சவரன் நகை, 20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் ஆகியவற்றை, கண்ணிமைக்கும் நேரத்தில் கழற்றி, 17 தங்க காசுகளை கொடுத்து சென்றனர்.அவை போலி என, தெரியவந்ததை அடுத்து, ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில், ராமநாதன் புகார் கொடுத்தார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், போலி தங்க காசுகளை கொடுத்து, 3 சவரன் நகை பறித்த சம்பவத்தில், குற்றவாளி கண்டுபிடிக்காத நிலையில், மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.