துரைமுருகன் அப்பவே அப்படி... முதல் நாளே சீனியர் வக்கீலை மாட்டி விட்ட 'கலகல' அனுபவம்!
துரைமுருகன் அப்பவே அப்படி... முதல் நாளே சீனியர் வக்கீலை மாட்டி விட்ட 'கலகல' அனுபவம்!
ADDED : ஜன 18, 2025 03:00 PM

செங்கல்பட்டு: வக்கீலாக பணியாற்றிய முதல் நாள் அனுபவத்தை கலகலப்பாக கூறினார் அமைச்சர் துரைமுருகன். தன் சீனியர் வக்கீலை, நீதிபதியிடம் மாட்டி விட்ட அவரது அனுபவம், தி.மு.க., சட்டத்துறை மாநாட்டில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டில் நடந்த தி.மு.க., சட்டத்துறை மாநில மாநாட்டில், அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: பொன்முடி அவர் வக்கீல் தான். கோர்ட்டுக்கே போகாதவர். அவரு கேஸ்க்கு மட்டும் போயிட்டு வருவார். சட்டத்துறை அமைச்சரும் அப்படிதான். அவரும் அதிகமாக கோர்ட்டுக்கு போகாதவர். பேசுகிற நான் எப்படி என்று கேட்டால், நானோ... அவர்களை யெல்லாம்விட பூஜ்ஜியம்.
முதல் முதலாக, நான் வக்கீல் ஆகி, பெரிய கோட் எல்லாம் தச்சுப்போட்டுட்டு, பல்கிவாலா மாதிரி கோர்ட்டுக்கு போனேன். என்னுடைய சீனியர் ஜி.ராமசாமி, 'யோவ் வாய்யா... கோர்ட்டுக்கு போகலாம்' என்றார். 'எந்த கோர்ட்டுக்கு' என்றேன். 'கோகுலகிருஷ்ணன் கோர்ட்' என்றார். நான் கோர்ட்டில் போய் பிரமாதமாக உட்கார்ந்து கொண்டேன். திடீரென சீனியர் என்னிடம், 'நான் போறேன். ரூமில் இருக்கிறேன். இந்த நம்பர் கேஸ் டபாலி கூப்பிடுவாரு.
'அரசு தரப்பில் யார் ஆஜராகிறீர்கள் என்று கேட்பாங்க, நீ எழுந்து நில்லு. 'மைசெல்ப்' என்று சொல்லு. 'நீங்க அரசு தரப்பில் ஆஜர் ஆகிறீர்களா, உங்கள் கருத்து என்ன' என்று கேட்பார்கள். நீ, 'நோ அப்ஜக்சன்' என்று சொல்லிவிட்டு வந்துவிடு என்றார். 'நான் தலை, கால் தெரியாமல் அப்ஜக்ஸன் இல்லைன்னு சொல்ல சொல்கிறீர்களே, ஏதாவது மாட்டிகிட்டா என்ன செய்வது' என்று கேட்டேன். 'அது எல்லாம் ஒண்ணும் கிடையாது. இதைச்சொல்லு போதும்' என்றார்.
நானும், 'வாட் இஸ் யுவர் ஒப்பினியன்' என்று நீதிபதி கேட்டவுடன், 'நோ அப்ஜக்சன் யுவர் ஹானர்' என்றேன். அவரு திருப்பி கேட்டாரு, 'நீங்க அரசு தரப்பில் ஆஜர் ஆகிறீர்களா' என்றார். 'ஆமாம்' என்றேன். 'உங்களுக்கு ஆட்சேபம் இல்லை என்று சொல்கிறீர்கள், ஏன் அப்படி சொல்கிறீர்கள்' என்றார்.
'என் சீனியர் அப்படித்தான் சொல்லச்சொன்னார்' என்றேன். 'அவர் எங்கே இருக்கிறார்' என்று கேட்டார். 'அவர் சேம்பரில் இருக்கிறார்' என்றேன். 'அவரை அழைத்து வாங்க' என்றார் நீதிபதி. 'நான் போய், வாங்க சார்' என்று கூட்டி வந்தேன். அரை மணி நேரம் பேசி, எனது சீனியரை நீதிபதி வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். இவ்வாறு துரைமுருகன் பேசினார். அமைச்சர் சொல்லச்சொல்ல கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

