ADDED : செப் 18, 2026 06:33 AM

தமிழகத்தில் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என, த.வெ.க.,வினர் வாக்குறுதி அளித்தனர். ஆனால், ஏற்கனவே 1,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்களை, தற்போது 5,000 - 7,000 ரூபாய் வரை செலுத்த வைக்கின்றனர்.
கிராமங்களிலும், நகரங்களிலும் பாரபட்சமின்றி மின்வெட்டு பிரச்னை உள்ளது. சீரான மின் வினியோகம் கேட்டு, பொதுமக்களே போராட்டம் நடத்துகின்றனர். விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை; இரு முனை மின்சாரத்தை வைத்து எப்படி விவசாயம் செய்ய முடியும்?
பா.ஜ.,வுடன் தி.மு.க., மறைமுக கூட்டணியில் இருந்தது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகிறார். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வின் எந்த கொள்கைக்கும் உடன்படவில்லை.
சமூக நீதி, சனாதனம், குடியுரிமை திருத்தச் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உட்பட, பா.ஜ.,வின் எந்த திட்டங்களுக்கும் தி.மு.க., உடன்படவில்லை. தற்போது, த.வெ.க., கூட்டணியில் இருப்பவர்கள் தான், மறைமுகமாக பா.ஜ.,வுடன் உறவில் உள்ளனர்.
சிறுபிள்ளையான ம.தி.மு.க., - எம்.பி., துரை வைகோ, தி.மு.க., குறித்தும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக பேசி வருகிறார்; அவர் பேசும் எதுவும் நியாயம் இல்லை. 'எங்க அப்பா கோபக்காரர்; என்னால் ம.தி.மு.க., கட்சியை நடத்த முடியாது; கொஞ்ச நாள் பொறுங்கள்; நான் தி.மு.க.,விற்கே வந்து விடுகிறேன்' என்று கூறியவர் தான் துரை வைகோ. ஸ்டாலின் குறித்து, வயதில் இளையவரான துரை வைகோ பேசலாமா? 'மிசா' காலத்தில் அவர் பிறந்திருக்கவே மாட்டார்.
- நேரு, முன்னாள் அமைச்சர், தி.மு.க.,
