மதுரை மாவட்ட நீதிமன்றங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க பொறியாளரிடம் விசாரணை
மதுரை மாவட்ட நீதிமன்றங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்க பொறியாளரிடம் விசாரணை
ADDED : ஆக 22, 2026 07:02 AM

மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றங்களுக்கு விடப்பட்ட மிரட்டல் தொடர்பாக 'இ- மெயில்' வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகியுள்ள அமெரிக்க மென்பொறியாளர் சரத் சுப்பிரமணியன் சங்கரை மதுரை அழைத்து வந்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சரத் சுப்பிரமணியன் சங்கர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது, நாடு முழுவதும் விமான நிலையங்கள், பள்ளி, கல்லுாரிகள், நீதிமன்றங்கள், முக்கிய பிரமுகர்களுக்கு இ- மெயில் மூலம் 1,500க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியதாகநுாற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தபோது விமான நிலையத்திலேயே குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப் பட்டார்.
இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றம், அதன் கிளை நீதிமன்றங்களுக்கு 5 முறை போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்காக சிறையில் இருந்த அவரை போலீசார் நேற்று மதுரை அழைத்து வந்தனர்.
'இ -மெயிலில் மிரட்டல்கள் எவ்வாறு அனுப்பப்பட்டன, எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்பினார்,
பின்னணியில் யார் உள்ளனர்' என பல்வேறு கோணங்களில் அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
