'இ - சேவை' மையங்களில் பழுதாகும் 'பிரின்டர்'களால் பணியாளர்கள் அவதி
'இ - சேவை' மையங்களில் பழுதாகும் 'பிரின்டர்'களால் பணியாளர்கள் அவதி
ADDED : ஜூலை 23, 2026 10:57 PM
சென்னை: அரசு, 'கேபிள் டிவி' நிறுவனத்தின், 'இ - சேவை' மையங்களில், 'லேப்டாப், பிரின்டர்' சாதனங்கள் வழங்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆவதால் அடிக்கடி பழுதாகின்றன.
தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், 'இ - சேவை' மற்றும் ஆதார் மையங்களை தமிழக அரசின், 'கேபிள் டிவி' நிறுவனம் நடத்துகிறது.
இ - சேவை மையங்களில் வருவாய் துறை உட்பட பல்வேறு அரசு துறைகளில் வழங்கப்படும் சான்றுகள் பெற விண்ணப்பம் செய்யப்படுகிறது.
ஆதார் மையங்களில் ஆதார் தொடர்பான சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மாநிலம் முழுதும், 936 இ - சேவை, ஆதார் மையங்கள் உள்ளன.
ஒவ்வொரு மையத்திலும், விரல் ரேகை, கண் கருவிழி ரேகை கருவிகள், 'லேப்டாப், பிரின்டர்' சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவை அடிக்கடி பழுதாவதால், விண்ணப்பிக்க முடியாமல் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, பணியாளர்கள் கூறியதாவது:
தற்போது பயன்பாட்டில் உள்ள பிரின்டர், விரல் ரேகை பதிவு, லேப்டாப் வழங்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆகின்றன.
அவை அடிக்கடி பழுதாவதால், விரல் ரேகை பதிவு ஆவதில்லை. பிரின்ட் எடுக்க முடிவதில்லை.
ஒரு விண்ணப்பத்திற்கு, 40 நிமிடங்கள் வரை ஆகின்றன. இதனால், அதிக பிழைகள் ஏற்படுகின்றன.
ஒரு பணியாளருக்கு மாதத்திற்கு, 30 பிழைகளுக்கு மேல் சென்றால், தொடர்ந்து வேலை செய்ய முடியாதபடி, கணினி ஐ.டி., முடக்கப்படுகிறது.
இந்த தவறுகளுக்கு, பிரின்டர் உள்ளிட்ட சாதனங்கள் பழுதாவதே முக்கிய காரணம். எனவே, தற்போதைய காலத்திற்கு ஏற்ப, நவீன தொழில்நுட்பத்திலான புதிய சாதனங்களை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
