வானுவாட்டு தீவில் நிலநடுக்கம் ஏராளமான கட்டடங்கள் சேதம்
வானுவாட்டு தீவில் நிலநடுக்கம் ஏராளமான கட்டடங்கள் சேதம்
ADDED : டிச 18, 2024 12:55 AM

வெலிங்டன், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், அங்குள்ள வானுவாட்டு தீவிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியா பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு வானுவாட்டு.
கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய இந்த நாட்டில், 3.20 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
இதன் தலைநகர் போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ., தொலைவில், 43 கி.மீ., ஆழத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை 7:04 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில், 7.3 ஆக பதிவானது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், தங்கள் வீடு, அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
பல வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து தரைமட்டமாகின. இதன் காரணமாக கட்டட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதேபோல் பல வாகனங்களும் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், ஏராளமான மின்கம்பங்களும் சரிந்தன. இதனால், பல பகுதிகள் இருளில் மூழ்கின.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். வானுவாட்டுவில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை, அந்நாட்டு அரசு இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக, இங்குள்ள கடலோர பகுதிகளில் அலைகள் 3 அடிக்கு மேல் எழும்பியதால், வானுவாட்டுவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. எனினும், சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது.