தலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை; தமிழக அரசு பணி நியமனத்தில் நடந்த மெகா ஊழல் அம்பலம்!
தலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை; தமிழக அரசு பணி நியமனத்தில் நடந்த மெகா ஊழல் அம்பலம்!
ADDED : அக் 29, 2025 12:01 PM

நமது சிறப்பு நிருபர்
சென்னை: தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமனத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை, லஞ்சம் கை மாறியுள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்தும்படி, தமிழக போலீசாருக்கு 232 பக்க அறிக்கையை அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகிக்கிறார். இவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம் தொடர்புடைய வங்கி மோசடி குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சோதனைகள் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டன.இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அமலாக்கத்துறை ஆராய்ந்தபோது அதிர்ச்சியளிக்கும் ஊழல் ஒன்று கண்டறியப்பட்டது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இந்தாண்டு பணி நியமனங்கள் செய்யப்பட்டன. இதற்கென அண்ணா பல்கலை சார்பில் எழுத்துத்தேர்வும் நடத்தப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்தாண்டு ஆக.,6ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார்.
இவ்வாறு நடந்த பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. பணி நியமனம் பெற்ற 2,538 பேரில் 150 பேர் ரூ.25 முதல் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுத்து அரசு வேலை பெற்றுள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளின் பெயர்கள் அடங்கிய ஆதாரங்களுடன் விசாரணை நடத்த கோரி 232 பக்க கடிதம் ஒன்றை தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2,538 காலியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டது. 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஒரு காலியிடங்களுக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை 150 பேரிடம் லஞ்சம் வசூலித்து இருக்கின்றனர். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களிடமும், தேர்வுகளை நடத்திய அண்ணா பல்கலை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

