ADDED : பிப் 09, 2025 08:44 PM

அன்னூர்: பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது என்று கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கோவை அன்னூர் பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டியக்கத்தின் சார்பில் நடந்த பாராட்டு விழாவில் இ.பி.எஸ்., கலந்து கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: ரூ.1652 கோடி செலவில் உருவாக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை மாநில அரசின் நிதியில் இருந்து முடிக்க உத்தரவிட்டேன். அ.தி.மு.க., ஆட்சியின் போது, 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டது. அதன்பிறகு, தி.மு.க., ஆட்சி அமைந்த உடன், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு விட்டனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து பவானி வரை 6 தடுப்பணைகள் கட்ட உத்தரவிடப்பட்டது. ஆனால் ஒரு தடுப்பணை அமைக்கும் பணி 40 சதவீதம் முடிந்தது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் போல தமிழகத்தில் இதுவரையில் எந்த திட்டமும் வரவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்றியதன் மூலம் பிறவிப் பயனை அடைந்து விட்டேன். இந்தத் திட்டத்திற்காக எந்த முயற்சியும் செய்யாமலேயே வந்து, திட்டத்தை திறந்து வைப்பர்களும் உள்ளனர்.
மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கி திட்டத்தை தொடங்கி வைத்தேன். மக்கள் நலனை பற்றி தி.மு.க., அரசுக்கு அக்கறையில்லை. திறமையற்ற அரசு தான் செயல்பட்டு வருகிறது. பணத்தாலோ, புகழாலோ என்னை அடிமைப்படுத்த முடியாது. யாருக்கும் நான் அடிமையாக மாட்டேன்.
2026ல் அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் 2வது கட்டப்பணி தொடங்கப்படும். எனக்கு எடுக்கும் இந்த நன்றி பாராட்டு விழாவை, விவசாயிகளின் பாராட்டு விழாவாக பார்க்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.