2 லட்சம் 'மார்க் ஷீட்'கள் அழிக்க கல்வித்துறை முடிவு
2 லட்சம் 'மார்க் ஷீட்'கள் அழிக்க கல்வித்துறை முடிவு
ADDED : அக் 11, 2025 09:44 PM
சென்னை:உரிமை கோரப்படாத, 2.08 லட்சம் பிளஸ் 2 தனித் தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தீயிட்டு அழிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககத்தால், கடந்த 2014 முதல், 2018ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் பங்கேற்ற தனித் தேர்வர்களின், 2.08 லட்சம் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன. இந்த மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு தேர்வு கள் இயக்க இயக்குநர் சசிகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு தேர்வுகள் சார்பில், 2014 முதல் 2018 செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்ட, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், துணை தேர்வுகள் எழுதிய, தனித் தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன. அவற்றை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், 2026ம் ஆண்டு ஜன., 10ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்படுகிறது. அதற்குள் அரசு தேர்வுகள் துணை இயக்குநரிடம் விண்ணப்பித்து, மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.