ADDED : மே 24, 2023 12:10 PM
கல்வி தான் மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் கருவி. கல்வி கற்பதில் சிறந்து விளங்கினால் தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். அதை மாணவர்களும் உணர்ந்து செயல்பட்டால்தான் எந்த ஒரு மாற்றமும் வெற்றி அடையும்.
சமூக சிந்தனை
இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பிறகான பொருளாதார மந்த நிலை, அதனால் ஏற்பட்ட சூழல் மாற்றம் வேலை வாய்ப்பை முதன்மை தேவையாக மாற்றி உள்ளது. அதனால் தான், இன்று பல கல்லூரிகளும் வேலை வாய்ப்பை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கின்றனர்.
மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதில், கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்தினால் மட்டும் போதாது. பொது மற்றும் சமூக சிந்தனை உள்ளவர்களாகவும் மாணவர்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
வலுவான பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்கள்தான் போட்டித்தேர்வுகளை எளிதாக எதிர் கொள்ள முடியும். இன்றைய போட்டி நிறைந்த உலகில் போட்டித்தேர்வுகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.
அதுபோன்ற நிலையில் தமிழக மாணவர்கள் தங்களுக்கான இடங்களையும், வாய்ப்புகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற்காக கல்வி நிறுவனங்களின் தரம் உயரவேண்டும். அதோடு புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்படும் பாடங்களின் உட்பொருளையும் மாணவர்கள் உணர்ந்து கற்று கொள்ள வேண்டும்.
பொறுப்பு
நம் நாட்டில் மாறி வரும் கல்வி சூழல், தேர்வு முறைக்கு ஏற்ப, தமிழகத்தில் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மதிப்பீடு செய்யப்பட்டு, தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தகைய மாற்றத்திற்கு ஏற்ப, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை தொடர்ந்து தயார்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு கல்வித்துறைக்கு உள்ளது.
நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பயனுள்ள முறையில், ஆக்கப்பூர்வமான வழியில் மேம்படுத்திக்கொள்ளத் தேவையான திறன்கள் மற்றும் அறம்சார் நற்குணங்கள் மாணவர்களிடையே வளர வேண்டும். மாணவர்களின் திறமைகளை வளர்த்து குணநலன்களை மேம்படுத்தி, சிறந்த மனிதர்களாக உருவாக்கும் வகையில், ஆசிரியர்கள் மென்மேலும் தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
போட்டி நிறைந்த எதிர்காலம் என்பதால் மாணவர்கள் மிகுந்த மன தைரியம் மிக்கவர்களாக உருவாக வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும். தனது தேவைகளையும், பிறரது தேவைகளையும் உணர்ந்தவர்களாக மாணவர்கள் மாறும்போது அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும்.