ADDED : பிப் 17, 2024 02:20 AM

தஞ்சாவூர்:தஞ்சாவூர், பனகல் கட்டடம் முன் நேற்று, காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹல்தரை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, மறைத்து வைத்திருந்த ஹல்தரின் உருவபொம்மையை எரித்து, அவரை பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர். அப்போது, மத்திய அரசு, கர்நாடக மாநில அரசுகளை கண்டித்து முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்திற்கு தலைமை வகித்த, ஒருங்கிணைப்பாளர் மணியரசன், நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா மாநில அரசு அணை கட்டிக் கொள்ளும் வகையில், தீர்மானத்தை ஆணையத் தலைவர் ஹல்தர் நிறைவேற்றினார்.
பிப்., 1ல் நடந்த, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் பங்கேற்றது ஏன் என்ற விளக்கம் அளிக்கவில்லை.
ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகதாது அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழக அரசு இதுவரை கண்டிக்கவில்லை. கர்நாடக புதிய அணை கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை.
எனவே, கர்நாடக அரசுக்கு ஆதரவாக செயல்படும் காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து ஹல்தரை நீக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஹல்தர் உருவ பொம்மையை விவசாயிகள் எரித்தனர். அப்போது, தீ பரவாமல் இருக்க தீ அணைப்பானை வைத்து தீயை அணைத்தனர். அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர், வயதான விவசாயி முகத்தில் வேண்டும் என்றே, தீயணைப்பானை அடித்ததில், அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. போலீசாரின் செயலுக்கு விவசாயிகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.