அரிசி விலை குறைக்க முயற்சி: இருப்பு விபரம் தர அரசு உத்தரவு
அரிசி விலை குறைக்க முயற்சி: இருப்பு விபரம் தர அரசு உத்தரவு
ADDED : பிப் 03, 2024 08:40 AM

சென்னை: 'அரிசி விலை உயர்வை தடுக்க, கையிருப்பில் உள்ள இருப்பு விபரத்தை, வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தெரிவிக்க வேண்டும்' என, அரிசி வியாபாரிகள் மற்றும் அரவை ஆலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போதிய மழை இல்லாததால், பல மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால், சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால், அரிசி விலை உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு, பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு, 2023 ஜூலையில் தடை விதித்தது. உடன், அரிசி விலை கிலோவுக்கு, 5 ரூபாய் வரை குறைந்தது.
இந்நிலையில், வரத்து குறைவால் தற்போது மீண்டும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. அத்துடன், பதுக்கல் மற்றும் ஊக வணிகத்தை தடுக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி, வர்த்தகர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெரிய வியாபாரிகள், அரிசி ஆலைகள், அரிசி மற்றும் நெல் கையிருப்பு விபரத்தை தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புழுங்கல் அரிசி, பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி, பாசுமதி அரிசி, நெல் ஆகியவற்றின் இருப்பு விபரங்களை, விற்பனையாளர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, மத்திய அரசின் பொது வினியோக துறையின் இணையதளத்தில், கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
இந்த விபரத்தை, அரிசி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு, தமிழக உணவு துறைக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

