ஏலகிரி விரைவு ரயில் இன்ஜின் சென்னையில் தடம்புரண்டது
ஏலகிரி விரைவு ரயில் இன்ஜின் சென்னையில் தடம்புரண்டது
ADDED : பிப் 18, 2024 03:11 AM

சென்னை : ஏலகிரி விரைவு ரயில், பேசின் பாலம் யார்டுக்கு கொண்டு செல்லும் போது, இன்ஜின் திடீரென தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, நேற்று காலை 9:15 மணிக்கு ஏலகிரி விரைவு ரயில் வந்தடைந்தது. இந்த ரயிலில் இருந்த பயணியர் இறங்கிச் சென்றனர்.
இதையடுத்து இந்த ரயில், பேசின் பாலம் யார்டு நோக்கி, பகல் 11:40 மணிக்கு காலி பெட்டிகளுடன் புறப்பட்டது. காலை 11:45 மணி அளவில் பேசின் பாலம் யார்டு அருகே சென்ற போது, இந்த ரயிலின் இன்ஜின் திடீரென தடம்புரண்டது. முன்புறத்தில் மூன்று ஜோடி சக்கரங்கள் ரயில் பாதையை விட்டு, கீழே இறங்கின.
இதுகுறித்து, ரயில் ஓட்டுனர், ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே தொழில்நுட்ப அதிகாரிகள், பணியாளர்கள், சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். விரைவு ரயில்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
இதற்கிடையில், நான்கு மணி நேரத்துக்கு பின், தடம்புரண்ட ரயில் சக்கரங்களை சரி செய்து, ரயிலை மீண்டும் இயக்கினர்.
கடந்த 13ம் தேதி, டீசல் ரயில் இன்ஜின் பேசின் பாலம் அருகே தடம் புரண்டது. அதற்கு அடுத்த நாள் அதிகாலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, 'டேங்கர்' சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.