ADDED : பிப் 23, 2024 02:54 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், வைகை அணை அருகே முதலக்கம்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சின்னகதிர்வேல் 73, இவரது மனைவி சுப்பம்மாள் 58, இவர்களுக்கு 3 ஆண், 3 பெண் பிள்ளைகள் இருந்தனர். இளைய மகன் வேல்முருகன் பராமரிப்பில் இருந்தனர்.
உடல் நலம் குன்றிய சுப்பம்மாவை கணவர் சின்னகதிர்வேல் உடன் இருந்து கவனித்து வந்தார். கடந்த ஆண்டு வேல்முருகனின் அண்ணன்கள் செல்வராஜ், பிரகாஷ் ஆகியோர் இறந்து விட்டனர். மகன்கள் இருவரும் இறந்ததால் பெற்றோர் துக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. மனம் வெறுத்த இருவரும் மூன்று நாட்களுக்கு முன் விஷ மாத்திரையை தின்றனர்.
இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி இருவரும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இறந்தனர். வேல்முருகன் புகாரில் ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சரவணகுமார், க.விலக்கு எஸ்.ஐ., பிரிந்தா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.