பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பியதாக மிரட்டி முதியவரிடம் ரூ.21 லட்சம் மோசடி
பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பியதாக மிரட்டி முதியவரிடம் ரூ.21 லட்சம் மோசடி
UPDATED : டிச 23, 2025 05:56 AM
ADDED : டிச 23, 2025 04:24 AM

ஏமா(ற்)றுவது பல விதம்... இதுவும் ஒரு விதம்
வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் ஓய்வு அரசு பஸ் கண்டக்டரிடம் லக்னோ போலீசார் என பேசிய நபர்கள் பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பியதாக கூறி மிரட்டி ரூ.21 லட்சத்தை வங்கி கணக்கு மூலம் பெற்று ஏமாற்றி உள்ளனர்.
வடமதுரையைச் சேர்ந்தவர் ஓய்வு அரசு பஸ் கண்டக்டர் குணசேகரன் 69. அவரது அலைபேசிக்கு நவ.,26ல் வாட்ஸ் ஆப் காலில் பேசிய நபர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து மனோஜ்குமார் என அறிமுகம் செய்து கொண்டு உங்களின் அலைபேசி, ஆதார் எண்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு 16 முறை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.
இதுகுறித்து நாளை (நவ.,27) லக்னோ போலீசார் உங்களுடன் பேசுவர் என்றார். அதே போல் நவ.,27ல் லக்னோ தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசில் இருந்து பேசுவதாக கூறி உங்கள் அலைபேசி எண் மூலம் பயங்கரவாதிகள் பேசியதாகவும், பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் கூறி பயங்கரவாதி அப்சல்குரு படத்தை அனுப்பி இவரை உங்களுக்கு தெரியுமா... என விசாரித்தனர். மேலும் இதுகுறித்து வேறு யாரிடமாவது தெரிவித்தால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கைது செய்வோம்.
நீங்கள் மூத்த குடிமகனாக இருப்பதால் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிற்கு பணம் கட்டினால் உங்கள் விசாரணை முடிந்த பிறகு பணத்தை மீண்டும் வட்டியுடன் அரசாங்கம் திருப்பி தந்துவிடும் என கூறி உள்ளனர்.
இதனால் பயந்த குணசேகரன் நகைகளை அடகு வைத்து முதல் நாள் ரூ.16 லட்சம், மறுநாள் ரூ. 5 லட்சம் என ரூ.21 லட்சத்தை அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார். மறுநாள் தொடர்பு கொண்ட அந்த நபர் 'உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி விட்டோம்' என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். வங்கி கணக்கை சோதித்தபோது பணம் வராததை தெரிந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
நுாதன மோசடி குறித்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

