ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் சலுகை
ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் சலுகை
ADDED : ஜன 18, 2024 09:03 PM

சென்னை: ஓய்வு பெறும் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கு சலுகைகளை அறிவித்து உள்ளது தேர்தல் ஆணையம்.
விரைவில் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல்ஆணையம். அதன் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரே இடத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் காவலர்களை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பணியிட மாற்றம் செய்தனர்.
இதனிடையே சலுகை அறிவிப்பு ஒன்றையும் அறிவித்து உள்ளது தேர்தல் ஆணையம். இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: தேர்தலை முன்னிட்டு ஓய்வு பெற ஆறு மாத காலம் (ஜூன் 30 வரையி்ல் ) உள்ள நிலையில் உள்ளவர்களுக்கு பணியிட மாற்றம் இல்லை. அதே நேரத்தில் 3 ஆண்டுகள் வரை பணி செய்து வருபவர்களின் பட்டியலை வரும் 31-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் டி.எஸ்.பி., தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் ஒரே மாவட்டத்தில் பணி செய்தால் பிரச்சனை இல்லை. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.