தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தகவல்
தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தகவல்
ADDED : ஜன 13, 2024 01:39 AM

லோக்சபா தேர்தல் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தப்படும் என ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இம்முறை சரியான நேரத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும் இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான தேதிகள் 2014ல் மார்ச் 5ம் தேதியும் 2019ல் மார்ச் 10ம் தேதியும் தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இம்முறை வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
இதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தின் இரண்டு நாள் மாநாடு தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையில் புதுடில்லியில் சமீபத்தில் நடந்தது.
அதில் பங்கேற்ற தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்த அட்டவணை ஜன. 7ம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு வரைவுக்கான ஆட்சேபனைகளை ஜன. 22க்குள் முடிக்க வேண்டும். இதில் பல மாநிலங்கள் பின்தங்கி உள்ளன.
இது குறித்து இரண்டு நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் கிடைத்த அனுபவம் மற்றும் படிப்பினைகள் குறித்து அதிகாரிகள் விரிவாக பகிர்ந்து கொண்டனர்.
தேர்தல் திட்டமிடல் செலவுகளை கண்காணிப்பது வாக்காளர் பட்டியல் தகவல் தொழில்நுட்ப விண்ணப்பங்கள் தரவுகளை ஒருங்கிணைப்பது மின்னணு ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு சீட்டு ஒப்புகை இயந்திரங்களின் கையிருப்பு மற்றும் தேவைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த தேர்தலை நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தி முடிப்பதில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் உறுதியாக உள்ளார்.
மாநிலங்களில் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் பதவி வகிக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் தேர்தல் கமிஷன் அறிவிக்கை அனுப்பி உள்ளது.
வரவிருக்கும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநில தேர்தல் அலுவலர்களுடன் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி முடித்துள்ளனர்.
மேலும் சென்னை சண்டிகர் ஆமதாபாத் குவஹாத்தி லக்னோ ஆகிய நகரங்களில் மண்டல அளவிலான ஐந்து கூட்டங்கள் சமீபத்தில் நடந்தன.
நாடு முழுதும் உள்ள 800 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகளுக்கு புதுடில்லியில் சமீபத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும் 3100 அதிகாரிகளுக்கு 'ஆன்லைன்' வாயிலாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை உரிய நேரத்தில் நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எனவே இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும். ஊடகங்களில் வெளியானதை போல தேர்தலை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -