செயலியை மேம்படுத்த ஆலோசனை கேட்கிறது தேர்தல் கமிஷன் தேர்தல் கமிஷன் அறிவிப்பு
செயலியை மேம்படுத்த ஆலோசனை கேட்கிறது தேர்தல் கமிஷன் தேர்தல் கமிஷன் அறிவிப்பு
ADDED : ஜன 04, 2026 02:34 AM

சென்னை: 'தேர்தல் கமிஷனின் ' ECiNet ' என்ற மொபைல் போன் செயலியை மாற்றி அமைக்க, வரும் 10ம் தேதி வரை பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தேர்தல் கமிஷனின் துணை இயக்குநர் பவன் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் கமிஷனின் 'இசிஐ நெட்' எனும் மொபைல் போன் செயலியை, பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து, வரும் 10ம் தேதி வரை அதில் பரிந்துரைகளை வழங்கலாம்.
பீஹார் சட்டசபை தேர்தலில் இந்த செயலி சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது.
இதனால் வாக்காளர் சேவைகள் மேம்படுத்தப்பட்டதுடன், ஓட்டுப்பதிவு சதவீத விபரங்கள் விரைவாக வெளியிடப்பட்டன.
ஓட்டுப்பதிவு விபரங்கள் அடங்கிய குறியீட்டு அட்டைகள் தயாரிக்க, முன்பு பல வாரங்கள் தேவைப்பட்டன. இந்த செயலியால், தற்போது ஓட்டுப்பதிவு முடிந்த 72 மணி நேரத்தில் அவற்றை வெளியிட முடியும்.
தலைமை தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், கள அலுவலர்களின் கருத்துகளின் அடிப்படையில் தொடர்ந்து இந்த செயலி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வழங்கும் அனைத்து பரிந்துரைகளும் பரிசீலிக்கப்பட்டு, இச்செயலி மேம்படுத்தப்படும். ஜனவரிக்குள் இந்த செயலி அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும்.
வாக்காளர் உதவி மையம் செயலி, 'சி விஜில்' செயலி உள்ளிட்ட தேர்தல் தொடர்பான 40 செயலிகள், இணையதளங்கள், இந்த செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இச்செயலியை கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

