வாக்காளர்கள் அளிக்கும் படிவங்களை அரசியல் கட்சியினர் வழங்க அனுமதி!
வாக்காளர்கள் அளிக்கும் படிவங்களை அரசியல் கட்சியினர் வழங்க அனுமதி!
ADDED : டிச 30, 2025 10:15 PM

சென்னை: வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான படிவங்களை, வாக்காளர்களிடம் சேகரித்து வழங்க, அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தகுதியான நபர்கள் மற்றும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான மனுக்களை அளிக்க, ஜனவரி, 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்கள், தினமும், 10 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சேகரித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.
இத தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், 18 வயது நிரம்பியவர்கள், தங்கள் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியை வெற்றிகரமாக முடிக்க, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஓட்டுச்சாவடி முகவர்களின் பங்கு இன்றியமையாதது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின், ஓட்டுச்சாவடி முகவர்கள், தினமும், 10 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
படிவங்களில் உள்ள விபரங்கள், தன்னால் சரி பார்க்கப்பட்டு திருப்தி அடையப்பட்டது என்ற உறுதிமொழியை, அவர்கள் வழங்க வேண்டும். இவ்வாறு பெறப்படும் படிவங்களை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சரி பார்த்து, அவற்றை டிஜிட்டல் வடிவில், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

