ADDED : ஜூன் 14, 2025 06:05 AM

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் மின் இணைப்பு வழங்காத கட்டடத்திற்கு மின் கட்டணத்தை இரண்டு முறை வசூலித்துள்ளதால் பயனீட்டாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சாயல்குடி அருகே சண்முக குமாரபுரத்தை சேர்ந்தவர் மதன் ராஜா 35. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். சண்முக குமாரபுரத்தில் புதிய ஓர்க் ஷாப் கடை கட்டியுள்ளார். கடைக்கு மின் இணைப்பு வேண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஓராண்டிற்கு முன்பு விண்ணப்பித்திருந்தார்.
மார்ச் 28ல் அவரது அலைபேசிக்கு மின்மீட்டர் பொருத்தியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து சாயல்குடி மின்வாரிய அலுவலகத்தில் தொடர்பு கொண்டு மதன் ராஜா கேட்ட போது பொருத்தியதாக மெசேஜ் மட்டும் வரும். நாங்கள் ஒரு வாரத்தில் மின் மீட்டர் பொருத்தி விடுகிறோம் எனக் கூறினர். அதன்படி மீட்டர் பொருத்தப்பட்டது.
அதே நேரம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஏப்., 17ல் மின் கட்டணம் ரூ.328 செலுத்துமாறு மெசேஜ் வந்தது. இந்த தொகையை ஆன்லைனில் கட்டியுள்ளார். அதன் பின் ஜூன் மாத மின் கட்டணம் ரூ.940 வந்துள்ளது.
இதுகுறித்து மெக்கானிக் மதன் ராஜா கூறியதாவது:
இணைப்பிற்கான மின்கம்பம் கூட அருகில் இல்லை. மின்கம்பம் நட வேண்டி ரூ.35 ஆயிரம் கட்டணம் செலுத்தி உள்ளேன். அதுபோக மின்வாரிய ஊழியர்கள் பணி செய்வதாக கூறி தொகையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
மின் இணைப்பே வழங்கப்படாத நிலையில் மின்கட்டணம் மட்டும் எப்படி வசூலிக்கிறார்கள். மின் மீட்டர் ரீடிங் இல்லாமல் எப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத்தினர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என தெரியவில்லை என வேதனை தெரிவித்தார்.
மின்வாரிய உதவி பொறியாளர் கனகராஜ் கூறுகையில் மீட்டர் பொருத்தி விட்டாலே குறைந்தபட்ச கட்டணம் வசூலிப்போம் என்றார். மின் கம்பம் நடுவதற்கு இடம் தேர்வு செய்து கொடுத்தால் இணைப்பு வழங்கப்படும் என்றார்.