ADDED : ஜன 19, 2024 01:24 AM
சென்னை:அறிவிக்கப்பட்ட மின் கட்டண குறைப்பை அமல்படுத்தாமல் மின் வாரியம் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், 10 வீடுகளுக்கும், மூன்று மாடிகளுக்கும் குறைவாக உள்ள, 'லிப்ட்' இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு, 8.15 ரூபாயிலிருந்து, 5.50 ரூபாயாக குறைக்கப்படும் என, கடந்த அக்., 18ல் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இதுவரை குறைக்கப்படவில்லை; இது கண்டிக்கத்தக்கது.
மின்கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி வீடுகள், இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மின்வாரியம் கூறி வருகிறது. இது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மாடிகள், வீடுகளின் எண்ணிக்கை, லிப்ட் உள்ளதா என்பது உள்ளிட்ட விபரங்கள் மின் வாரியத்தின் ஆவணத் தொகுப்புகளில் உள்ளன. அவற்றின் உதவியுடன் ஒரு வாரத்தில் கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்தி இருக்க முடியும்.
ஆனால், அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களாகியும் கட்டணம் குறைக்கப்படவில்லை. இதுகுறித்து, மின் வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

