ADDED : அக் 08, 2025 03:57 AM

சென்னை:தமிழக மின் வாரியத்தில் பணிபுரியும், 'கேங்மேன்' ஊழியர்களை, கள உதவியாளராக பணிமாற்றம் செய்ய கோரி, மின் ஊழியர் மத்திய அமைப்பினர், சென்னை கே.கே.நகர் மின் வாரிய அலுவலகம் முன், நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் கண்ணன் கூறியதாவது:
மின் வாரியத்தில், கேங்மேன் பதவியில், 9,613 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், 2021 பிப்ரவரியில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓய்வுபெறும் வரை, மூன்று பதவி உயர்வு மட்டுமே கிடைக்கும். இந்த பதவிகளுக்கான சம்பள விகிதம் குறைவு. அதே சமயம், கள உதவியாளராக பணிபுரிவோருக்கு, குறைந்தது நான்கு முதல் ஐந்து பதவி உயர்வும், நல்ல சம்பளமும் கிடைக்கும். தற்போது மொத்தம், 60,000 காலி பணியிடங்கள் இருப்பதில், கள உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை, 26,000.
கள உதவியாளர், கம்பியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான பணிகளை, கேங்மேன் பணியாளர்கள் தான் செய்கின்றனர். அவர்களை, பணி அனுபவத்தின் அடிப்படையில் கள உதவியாளர்களாக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 12 மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்கள் முன், காத்திருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு கோரிக்கையை ஏற்கவில்லை எனில், போராட்டம் தொடர்ந்து நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.