ADDED : ஜன 22, 2025 12:35 AM
'மின் கணக்கீட்டிற்கு வரும் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால், அவர்களின் அடையாள அட்டையை கேட்டு வாங்கி சரிபார்க்கவும்' என, மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒருமுறை, மின்வாரிய ஊழியர்கள் நேரில் சென்று, மின் மீட்டரில் பதிவாகி உள்ள மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.
மின் பயன்பாடு, அதற்குரிய மின்கட்டணத் தொகை போன்ற விபரங்களை, நுகர்வோரிடம் உள்ள மின் கணக்கீட்டு அட்டையில் எழுதித் தருகின்றனர். இந்நிலையில், சென்னை ஐஸ் ஹவுசில், வீட்டில் தனியாக இருந்த நபரிடம், மின்வாரியத்தில் இருந்து வருவதாகக் கூறிய மர்ம நபர், நகை, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, 'உஷார் மக்களே, மின்வாரிய ஊழியர் என்றால் அடையாள அட்டையை கேட்கவும்; சந்தேகம் இருந்தால், உடனே, காவல் உதவி மையத்தை, 100 எண்ணிலும்; மின்னகத்தை, 94987 94987 எண்ணிலும் அழைக்கவும்' என, பொதுமக்களை மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.