மின் வாரியத்தில் பணி நிரந்தரம்; ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மின் வாரியத்தில் பணி நிரந்தரம்; ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஆக 19, 2025 02:53 AM

சென்னை : தமிழக மின் வாரியத்தில், ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிவோரை பணி நிரந்தரம் செய்யக்கோரி, மின் வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழக தேசிய காங்கிரஸ் மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில், சென்னை அண்ணா சாலை மின் வாரிய அலுவலகம் பின்புறம், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டம் குறித்து, அதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:
மின் வாரியத்தில், ஐந்து முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அனைத்து புயல், மழை பேரிடர் காலங்களில், ஒப்பந்த ஊழி யர்கள், உயிரை பணயம் வைத்து பணிபுரிகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில், 300க்கும் மேற்பட்ட, ஒப்பந்த ஊழியர்கள் பணியின் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளனர். இதை, மின் வாரியம் மறைக்கிறது. உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க, நீதி விசாரணை செய்ய, சி.பி.ஐ.,க்கு, தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்தோர், 2007ல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட போது, விடுபட்ட நபர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
'பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்' என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை, அரசு நிறைவேற்ற வேண்டும்.
நிரந்தர ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.