மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: ராமதாஸ்
மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது: ராமதாஸ்
ADDED : டிச 09, 2024 04:34 AM

சென்னை: 'தமிழக மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக மின்சார வாரியத்தின் அங்கமான, தமிழக மின் தொடரமைப்பு கழகம் சார்பில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில், 132 ஏக்கர் நிலப்பரப்பில், 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையம் அமைக்கப்பட உள்ளது.
சொந்த முதலீட்டில்...
அங்கிருந்து அரியலுார் வரை மின்பாதை,கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை செய்து முடிக்க, 4,500 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது மின்வாரியத்தை, தனியாருக்கு தாரை வார்க்கும் பணிகளை விரைவுப்படுத்தும். தமிழகம் முழுதும் மின்சாரம் கொண்டு செல்லும் பாதைகளை அமைத்து பராமரிக்க வேண்டியது, தமிழக மின் தொடரமைப்பு கழகத்தின் பணி. அதற்காக அந்த அமைப்பின் சார்பில், 1,091 துணை மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வாயிலாக, 38,771 சுற்று கி.மீ., தொலைவுக்கு, மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இரு துணை மின்நிலையங்கள், தலா 765 கிலோ வோல்ட் திறன் கொண்டவை. அவற்றின் வாயிலாக மட்டும் 733 சுற்று கி.மீ., தொலைவுக்கு மின்பாதைகள் அமைக்கபட்டுள்ளன.
இவை அனைத்தும் மின் தொடரமைப்பு கழகத்தின் வாயிலாக, அதன் சொந்த முதலீட்டில் அமைக்கப்பட்டன; தனியார் முதலீட்டில் மேற்கொள்ளவில்லை.
சாதகமாக்காது
முதன்முறையாக இப்போது தான் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையம், அதன் மின் பாதைகள், தனியார் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளன.
மின்சார வாரியம் இப்போதுள்ள நிலையில், தனியார் மயமாக்கல் திட்டம் அதன் நிதி நிலையையும், லாபமீட்டும் தன்மையையும் மேலும் மோசமாக்குமே தவிர, எந்த வகையிலும் சாதகமாக பயனளிக்காது.
எனவே, 765 கிலோ வோல்ட், துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை, தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அந்த திட்டத்தை மின் தொடரமைப்பு கழகமே, சொந்த முதலீட்டில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.