மின்வாரிய அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு: 'சூடாகிறது' சோலார் பம்ப்செட் விவகாரம்
மின்வாரிய அறிவிப்பால் விவசாயிகள் கொந்தளிப்பு: 'சூடாகிறது' சோலார் பம்ப்செட் விவகாரம்
UPDATED : ஏப் 14, 2025 10:10 AM
ADDED : ஏப் 14, 2025 07:15 AM

கோவை: சோலார் பம்ப்செட் நிறுவியுள்ள விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்படமாட்டாது என, தமிழ்நாடு மின் வினியோகக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு, பதிவு மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி, தமிழ்நாடு மின் வினியோக கழகம் (டி.என்.பி.டி.சி.எல்.,) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, விவசாயிகள் தாங்களாகவோ, அரசின் மானியத் திட்டங்கள் ஏதாவது ஒன்றின் வாயிலாகவோ, விவசாய நிலத்துக்கு சோலார் பம்ப் நிறுவியிருந்தால், அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த கட்டணம் 4வது மானியத் திட்டத்தின் கீழும், புதிதாக விவசாய மின் இணைப்பைப் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: மின்சாரம் இன்றி, விவசாயம் செய்யவே முடியாது. மின் இணைப்புக்குக் கட்டணம் செலுத்துவது பெரும் சுமையாகவே முடியும். இந்நிலையில், சோலார் பம்ப்செட் நிறுவியுள்ள விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு இல்லை என்ற அறிவிப்பு முட்டாள்தனமானது.
சோலார் மின் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டிய அரசு, அதைத் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் செய்து வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளது. இலவச மின் இணைப்பு இன்றி, விவசாயிகளால் கட்டுபடியாகக்கூடிய வகையில் விவசாயம் செய்ய முடியாது. இத்திட்டத்தை உடனே திரும்பப்பெற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பழனிசாமி கூறியதாவது:
விவசாயத்தைக் காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே, வெளியிடப்பட்ட அறிவிப்பு இது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஏரி, குளம், ஆற்றுப்பாசனம் இல்லை. நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் செய்கிறோம். இங்கு அதிகபட்சம் 4,000 கிணறுகள் இருக்கும். மற்றவர்கள், ஆழ்துளைக் கிணறை நம்பித்தான் உள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் 1,200 அடிகளைத் தாண்டி விட்டது. மின் இணைப்பு இல்லாமல் என்ன செய்வது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு நெருக்கடியை உருவாக்கும். அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.