இன்று முதல் மின் கட்டணம் உயர்வு; யூனிட்டுக்கு 41 காசு வரை அதிகரிப்பு
இன்று முதல் மின் கட்டணம் உயர்வு; யூனிட்டுக்கு 41 காசு வரை அதிகரிப்பு
UPDATED : ஜூலை 01, 2025 11:11 AM
ADDED : ஜூலை 01, 2025 03:47 AM

சென்னை : தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், இன்று முதல், 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு, 15 காசு முதல், 41 காசு வரை அதிகரிக்கும். வீடுகளுக்கான கட்டண உயர்வை அரசு ஏற்றதால், அந்த பிரிவுக்கு கூடுதல் செலவு ஏற்படாது.
அதேநேரத்தில், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும், நிலை கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது.
![]() |
* அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள லிப்ட், உடற்பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை பிரிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பிரிவுக்கு யூனிட், 8.55 ரூபாயாக இருந்த கட்டணம், 8.80 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது
* குடிசை தொழில், குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட், 4.80 ரூபாயாக இருந்த கட்டணம், 4.95 ரூபாயாகவும்; 500 யூனிட் மேல், 6.95 ரூபாயாக இருந்த கட்டணம், 7.15 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது
* விசைத்தறிக்கு, 500 யூனிட் வரை, 6.95 ரூபாயாக இருந்த கட்டணம், 7.15 ரூபாயாகவும்; 501 மேல் யூனிட்டிற்கு, 8 ரூபாயாக இருந்த கட்டணம், 8.25 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது
* தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, யூனிட்டிற்கு, 8 ரூபாயில் இருந்து, 8.25 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது
* தற்காலிக மின் இணைப்பு கட்டணம் யூனிட்டிற்கு, 12.85 ரூபாயில் இருந்து, 13.25 ரூபாயாக உயர்ந்துள்ளது
![]() |