ஜூலை 1 முதல் உயர்கிறது மின் கட்டணம்; வீடுகளுக்கான செலவை அரசு ஏற்கிறது
ஜூலை 1 முதல் உயர்கிறது மின் கட்டணம்; வீடுகளுக்கான செலவை அரசு ஏற்கிறது
ADDED : ஜூன் 29, 2025 01:05 AM

சென்னை : தமிழகத்தில் நாளை மறுநாளில் இருந்து மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களை உள்ளடக்கிய விரிவான கட்டண ஆணையை, மின்சார ஒழுங்குமுறை தயாராக வைத்துள்ளது.
தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, அரசு நிறுவனமான மின்வாரியமே மேற்கொள்கிறது. மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம், தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் உள்ளது. நீதிமன்ற அதிகாரம் உடைய ஆணையம், ஒரு தலைவர் மற்றும் இரு உறுப்பினர்களுடன் செயல்படுகிறது.
மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், 2022 செப்டம்பர், 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இது தொடர்பான ஆணையில், அந்த நிதியாண்டு முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஆணையம் அனுமதி அளித்தது.
இந்த கட்டணத்தை, 6 சதவீதம் அல்லது அந்த ஆண்டின் ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில், எந்த சதவீதம் குறைவோ, அந்த அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஏற்ப, இரு ஆண்டுகளாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண், 3.16 சதவீதமாக இருப்பதாக, மத்திய அரசு மே மாதம் தெரிவித்தது.
எனவே, ஜூலை 1ம் தேதி முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்த ஆணையம் முடிவு செய்தது. இந்த விபரம், மே மாதமே வெளியானதால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து, 'தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து, எவ்வித ஆணையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. எனினும், ஆணையம், ஆணை வெளியிடும்போது, வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்கக்கூடாது, இலவச மின்சார சலுகைகள் தொடர வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
எனவே, 'வீடுகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. இலவச சலுகைகள் தொடரும்' என்று, மின்துறை அமைச்சர் சிவசங்கர், மே, 20ல் தெரிவித்தார்.
இதேபோல, தொழிற்சாலைகளுக்கான கட்டண உயர்வையும், அரசு ஏற்பதாக அறிவிக்க வேண்டும் என, தொழில் துறையினர் வலியுறுத்தினர்.
இந்நிலையில், நாளை மறுநாள் முதல் மின் கட்டணத்தை, 3.16 சதவீதம் உயர்த்தும் வகையில், புதிய கட்டண விகிதங்களுடன் கூடிய ஆணையை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தயாரித்துள்ளது.
யூனிட்டிற்கு, 15 காசு முதல், 37 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டதும், வீட்டு நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் செலவை, தமிழக அரசு ஏற்று, மின்வாரியத்திற்கு மானியமாக வழங்க உள்ளது.