யானைக்குட்டிகள் பராமரிப்பு ‘வெற்றி’ அறக்கட்டளை நிதியுதவி
யானைக்குட்டிகள் பராமரிப்பு ‘வெற்றி’ அறக்கட்டளை நிதியுதவி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:06 PM

திருப்பூர்: ஆனைமலை கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மூன்று யானைக் குட்டிகளின் உணவு மற்றும் சிறப்பு ஊட்டச்சத்துக்காக, திருப்பூர் ‘வெற்றி’ அறக்கட்டளை சார்பில், 2.60 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
தேசிய வனவிலங்கு வாரத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் மறுவாழ்வு பெற்று வரும் ஆதரவற்ற யானைக் குட்டிகளுக்கு உதவ ‘வெற்றி’ அறக்கட்டளை முடிவு செய்தது. அறக்கட்டளை தலைவர் சிவராம் அறிவுறுத்தலில், அவற்றின் பராமரிப்புக்காக, 2.60 லட்சம் நிதி திரட்டப்பட்டது.
தாயிடமிருந்து பிரிந்த மூன்று யானைக் குட்டிகளை அவற்றின் குடும்பக் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும், அவற்றை தாய் யானைகளுடன் சேர்க்க முடியவில்லை. இதையடுத்து, சிறுமுகை வனச்சரக எல்லையில் இருந்து மீட்கப்பட்ட, 20 மாதம் மற்றும், 6 மாத வயதுடைய இரண்டு குட்டிகளும், மதுக்கரை வனச்சரகத்தில் இருந்து மீட்கப்பட்ட, 12 மாத வயதுடைய ஒரு குட்டியும் கோழிக்கமுத்தி முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா வழிகாட்டுதலின்படி, மூன்று குட்டிகளும், 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
‘வனத்துக்குள் திருப்பூர்’ உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ‘வெற்றி’ அறக்கட்டளை உறுப்பினர்கள், நேற்று கோழிக்கமுத்தி முகாமுக்குச் சென்று யானைக் குட்டிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, பாகன்கள் மற்றும் பராமரிப்பாளர்களிடம் அவற்றின் பராமரிப்பு குறித்து கேட்டறிந்து, ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகளிடம், 2.60 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
