உயிரிழந்த யானை; தவிக்கும் குட்டி; கூட்டத்தில் சேர்க்க கோவை வனத்துறை தீவிரம்
உயிரிழந்த யானை; தவிக்கும் குட்டி; கூட்டத்தில் சேர்க்க கோவை வனத்துறை தீவிரம்
UPDATED : டிச 24, 2024 07:44 PM
ADDED : டிச 24, 2024 12:15 PM

கோவை: கோவை அருகே பெண் யானை உயிரிழந்து கிடக்க, அதன் அருகில் தவிக்கும் குட்டியானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கோவை கோட்டத்திற்கு உட்பட்ட பன்னிமடை பகுதியில் உள்ள தடாகம் காப்பு வனப்பகுதியில் இருந்து நேற்று (டிச.23) இரவு யானைக்கூட்டம் வெளியேறியது. இதை அறிந்த வன பணியாளர்கள் மற்றும் இரவு ரோந்து குழுவினர் தீவிர முயற்சி செய்து யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இன்று (டிச.24) காலை கூட்டத்திலிருந்து குட்டி ஒன்று தனிமைப்படுத்தப்பட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது பன்னிமடை அருகே தடாகம் ஆர்.எஃப் பகுதியில் இருந்து 1 கி.மீ., தொலைவில் பட்டா நிலத்தில் பெண் யானை இறந்து கிடந்து உள்ளதை கண்டனர்.
உயிரிழந்த பெண் யானை அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி உள்ளதையும் அவர்கள் பார்த்தனர். இறந்த பெண் யானை, குட்டியின் தாயா அல்லது யானை கூட்டத்தை சேர்ந்ததா என்பதை உறுதி செய்ய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. வன பணியாளர்கள் மற்றும் கால்நடை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தி பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த குட்டி யானையை மீட்டு பத்திரமாக காட்டுப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்றனர். பின்னர் அருகில் உள்ள யானைக் கூட்டத்துடன் இணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உட்கார்ந்த நிலையில் யானை உயிரிழப்பு ஏன்? பிரேத பரிசோதனையில் தகவல்
கோவை அருகே வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்டிருந்த, 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, கீழே விழுந்து மீண்டும் எழுந்திருக்க முயன்றுள்ளது. முடியாமல் போன நிலையில், தவளையை போல் உட்கார்ந்த நிலையில் எழ முயற்சித்துள்ளது. உடல் ஒத்துழைக்காத நிலையில், அதிர்ச்சியும், நுரையீரல்- இதய செயல் இழப்பும் ஏற்பட்டு உயிர் இழந்துள்ளது:
பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்: வனத்துறை கால்நடை மருத்துவர் டாக்டர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நடத்திய பிரேத பரிசோதனை முடிவில் இந்த அறிக்கை தரப்பட்டுள்ளது.