UPDATED : ஜன 17, 2024 05:57 AM
ADDED : ஜன 17, 2024 05:55 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில், 'யானைப் பொங்கல் விழா' நேற்று கொண்டாடப்பட்டது. யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததை சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வனச்சரகத்திற்குட்பட்ட கோழிகமுத்தி முகாமில், வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகின்றன.
![]() |
இங்கு, வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதின் அவசியம் குறித்து, மக்களிடையே விளக்கும் வகையில், ஆண்டுதோறும் டாப்சிலிப்பில், யானைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு யானை பொங்கல் விழா, கோழிகமுத்தி யானை முகாமில் நேற்று நடந்தது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜா தலைமை வகித்தார். வனச்சரகர்கள் சுந்தரவேல், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.
முகாமில் யானைகள் குளிப்பாட்டி, அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டன. பின், கஜ பூஜை நடந்தது. விநாயகப்பெருமானை, யானைகள் வழிபாடு செய்தன. தொடர்ந்து, பழங்குடியின மக்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, அனைத்து யானைகளுக்கும் பொங்கலுடன் கரும்பு, தேங்காய் மற்றும் பழவகைகள் மற்றும் உணவும் வழங்கப்பட்டன.
![]() |
இவ்விழாவை காண, பொள்ளாச்சி மட்டுமின்றி பல்வேறு பகுதியிலிருந்தும், சுற்றுலாப்பயணியர் அதிகளவு வந்து கண்டுகளித்தனர்.



