மின்வெட்டை தவிர்க்கவே அவசர கொள்முதல்; அமைச்சர் நிர்மல்குமார் பதில்
மின்வெட்டை தவிர்க்கவே அவசர கொள்முதல்; அமைச்சர் நிர்மல்குமார் பதில்
ADDED : அக் 14, 2026 08:47 PM

சென்னை: ''காஸ் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்பதால், ஒரு யூனிட் 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது,'' என, மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
அவர் அளித்த பேட்டி: வரும் 15 முதல் 31ம் தேதி வரை மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு, 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. அது காஸ் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்பதால், ஒரு யூனிட் 33 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதன் உற்பத்தி செலவு 30 ரூபாய்க்கு மேல் ஆகிறது. இந்த மின்சாரத்தை வைத்து மாலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரையிலான மின் தேவை சமாளிக்கப்படும். இதற்காக நாள்தோறும் ஐந்து கோடி ரூபாய் முதல் ஏழு கோடி ரூபாய் வரை மின் வாரியத்திற்கு கூடுதல் செலவு ஏற்படும்.
மின்வெட்டு ஏற்படாமல் தேவையை பூர்த்தி செய்ய, அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது 5,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. கூடுதல் தேவையை சமாளிப்பதற்கு, 500 முதல் 1,000 மெகாவாட் வரை மட்டுமே கூடுதல் விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நீண்ட கால டெண்டர் வாயிலாக மின்சாரம் பெறும் பணிகள், 2027 பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் துவங்கும். அதுவரை தேவைக்கேற்ப குறுகிய கால ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. கொள்முதல் குறித்து தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
மின்சாரத்தின் விலை, உற்பத்தி செலவு, கிடைக்கும் அளவு, மாநிலத்திற்கு தேவையான அளவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே கொள்முதல் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
