sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பா..? வெள்ளை அறிக்கையை விடுங்க பார்ப்போம்; அன்புமணி சவால்

/

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பா..? வெள்ளை அறிக்கையை விடுங்க பார்ப்போம்; அன்புமணி சவால்

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பா..? வெள்ளை அறிக்கையை விடுங்க பார்ப்போம்; அன்புமணி சவால்

5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பா..? வெள்ளை அறிக்கையை விடுங்க பார்ப்போம்; அன்புமணி சவால்

11


UPDATED : செப் 22, 2024 04:34 AM

ADDED : செப் 21, 2024 10:24 PM

Google News

UPDATED : செப் 22, 2024 04:34 AM ADDED : செப் 21, 2024 10:24 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து விட்டதாக கூறுவது எந்த அளவுக்கு மாயையோ, அதேபோன்று 5 லட்சம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுவதும் ஓர் இனிமையான மாயை தான் என்று தி.மு.க., அரசை பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

ஐயம்


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் 68,039 இளைஞர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் 5,08,055 இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு இந்த அளவுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் தொடர்பான ஐயங்களை பலமுறை கேட்டும் தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

விடையில்லை


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் வாயிலாக 34,384 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், பல்வேறு அரசுத்துறைகளில் நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த பணி நியமனங்கள் முறைப்படி செய்யப்பட்டனவா அல்லது ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை நியமனங்களா? இந்த நியமனங்கள் தற்காலிகமானவையா, நிரந்தரமானவையா? இந்த பணியாளர்களுக்கான ஊதிய விகிதம் என்ன? என்பது தொடர்பாக கடந்த ஓராண்டாக பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பி வரும் வினாக்களுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

மாயை


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளின் வாயிலாகவும், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட சிறப்பு முயற்சிகளின் காரணமாகவும் கடந்த மூன்று ஆண்டுகளில் 5,08,055 தமிழகத்திற்கு இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து விட்டதாக கூறுவது எந்த அளவுக்கு மாயையோ, அதேபோன்று 5 லட்சம் பேருக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுவதும் ஓர் இனிமையான மாயை தான்.

ஏமாற்றும் செயல்


தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை மூன்று முறை மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்கட்டண சுமையை தாங்க முடியாமல் பல்லாயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தின் தொழில்வளர்ச்சிப் பகுதியாக கருதப்படும் கோவை மண்டலத்தில் செயல்பட்டு வந்த பல நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டன. உண்மை நிலை இவ்வாறு இருக்க, தனியார் துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியிருப்பதாக அரசு கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்.

வெள்ளை அறிக்கை


2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசுத்துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், தனியார் துறையில் ஆண்டுக்கு 10 லட்சம் வீதம் ஐந்தாண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, அதில் 10% மட்டும் தான் தமிழக அரசு எட்டியிருக்கிறது. தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களும் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இல்லை.

தமிழகத்தின் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்பாக மக்கள் மனதில் நிலவும் ஐயங்களைப் போக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் என பல்வேறு அமைப்புகளின் வாயிலாக 33,655 பேருக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் தன்மை, தனியார் துறையில் 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் எங்கெங்கு, எப்போது ஏற்படுத்தப்பட்டன? எந்த வகையான தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன? வேலைவாய்ப்பு பெற்ற 5 லட்சம் பேரும் தமிழர்கள் தானா? இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதில் தமிழக அரசின் பங்களிப்பு என்ன? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மன்னிப்பு கேட்கணும்


அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகளையும், தனியார் துறையில் 50 லட்சம் வேலைகளையும் ஏற்படுத்தித் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடந்த மூன்றரை ஆண்டுகளில் அதில் வெறும் 10 விழுக்காட்டை மட்டுமே நிறைவேற்றியிருப்பதன் மூலம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்து விட்டது. அதற்காகவும், தவறான புள்ளிவிவரங்களை அளித்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்வதற்காகவும் தமிழ்நாட்டு மக்களிடம் தி.மு.க., அரசு மன்னிப்பு கேட்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us