ADDED : நவ 14, 2024 12:24 AM

சென்னை: 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நேரடியாக குறிப்பிடாமல், அரசின் சார்பில் வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது' என, தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத் தலைவர் வெங்கடேசன், இணை பொதுச் செயலர் லெனின் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 8ம் தேதி நடந்த, பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை; நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே தேர்தலுக்குள் நிறைவேற்ற, முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல் பரவியது.
இது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம், கானல் நீராக போய் விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, நேரடியாக குறிப்பிடாமல், அரசின் வாயிலாக வெற்று அறிக்கைகள் வருவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தாது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்ற மனநிலைக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.